1940இல் ஜெர்மானியர்கள் ஊடுருவிய தருணத்தில், நேசிப்பதிலும், வேலைசெய்வதிலும், குடும்பத்தோடும் நண்பர்களோடும் நேரம் செலவழிப்பதிலும் தன் வாழ்க்கையை நடத்திய டயட் ஈமன், கூச்ச சுபாவம் கொண்ட ஒரு சாதாரணமான பெண். “உங்கள் வீட்டிற்கு ஒரு அபாயம் என்றால், ஒரு நெருப்புக் கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்வதுபோல செயல்படவேண்டும்” என்று டயட் பின் நாட்களில் எழுதுகிறாள். ஜெர்மானிய கலகக்காரர்களை எதிர்த்து நிற்கும் அழைப்பை தேவன் தனக்கு தந்துள்ளதாக எண்ணிய இவள், தன்னுடைய ஜீவனை பணயம் வைத்து, யூதர்களையும் பாதிக்கப்பட்ட மற்ற ஜனங்களையும் ஜெர்மானியர்களின் கண்ணில்படாத வகையில் ஒளித்துவைத்தாள். அடையாளம் தெரியாத இந்த இளம்பெண் தேவனுடைய யுத்தவீராங்கனையாய் மாறினாள்.
டயட்டைப் போன்றே சற்றும் பொருந்தாத சில கதாப்பாத்திரங்களை தேவன் பயன்படுத்திய பல சம்பவங்களை வேதத்தில் நாம் பார்க்கமுடியும். உதாரணத்திற்கு, தேவதூதன் கிதியோனை சந்தித்தபோது, “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்றான் (நியாய. 6:12). கிதியோன் பராக்கிரமசாலியாகவே தென்பட்டான். அப்போது அவன், இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த மீதியானியரின் கைக்கு தப்புவிக்கும்பொருட்டு, கோதுமையை இரகசியமாய் போரடித்துக்கொண்டிருந்தான் (வச. 1-6,11). அவன் இஸ்ரவேலில் மனாசே கோத்திரத்தில் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தகப்பன் வீட்டிலுள்ள எல்லோரைக்காட்டிலும் சிறியவன் (வச. 15). அவன் தேவனுடைய அழைப்பை நம்பாமல், அதை உறுதிப்படுத்த பல அடையாளங்களை கேட்கிறான். ஆனாலும் தேவன் அவனைக் கொண்டு மீதியானியரை முறியடித்தார் (7ஆம் அதி. பார்க்க).
தேவன் கிதியோனை பராக்கிரமசாலியாகப் பார்த்தார். தேவன் கிதியோனோடு இருந்து அவனை ஊக்கப்படுத்தியதுபோல, அவர் நம்மை அவருடைய பிரியமான பிள்ளைகளாய் ஏற்று (எபேசியர் 5:1) சிறிய மற்றும் பெரிய வழிகளில் அவருக்காக வாழ்ந்து, ஊழியம் செய்யும்பொருட்டு நமக்குத் தேவையான அனைத்தையும் நமக்கு அருளுகிறார்.
பெலவீனத்தின் மத்தியிலும் தேவன் பயன்படுத்தி தன் சித்தத்தை நிறைவேற்றிய சில வேதாகம கதாபாத்திரங்கள் யாவர்? உங்களுடைய பாதுகாப்பான சூழலிலிருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோய் உங்களை அவருக்கு எப்படி ஊழியம் செய்ய வைத்தார்?
தேவனே, நான் என்னைப் பார்ப்பதுபோல நீர் என்னை பார்ப்பதில்லை. அதற்காக நன்றி. உமக்காக சிறியதோ அல்லது பெரியதோ, எதையும் செய்யும், உமக்கு பிரியமான பிள்ளையாய் நான் என்னைப் பார்க்க எனக்கு உதவிசெய்யும்.