அவளுக்கு திருச்சபைக்கு போவதற்கு கடைசியாய் வாய்ப்பு கிடைத்தது. சபையின் அடித்தளத்தில், ஒரு சிறு குகையை அவள் அடைந்தாள். மெழுகுவர்த்திகள் நிறைந்த அந்த குறுகிய இடத்தில், தொங்கிக்கொண்டிருந்த விளக்குகள், தரையின் ஒரு மூலையைக் காட்டுகிறது. மார்பிள் தரையில் பதினான்கு புள்ளிகள் உள்ள ஒரு வெள்ளி நட்சத்திரம் இருந்தது. பெத்லெகேமில் இயேசு பிறந்தார் என்று பாரம்பரியமாய் நம்பப்படுகிற ஆலயத்தில் அவள் இருந்தாள். ஆனாலும் அந்த இடத்தை விட தேவன் மிகவும் பெரியவர் என்று நம்பினதினால், எழுத்தாளர் ஆனி டில்லார்ட் அந்த இடத்தினால் அப்படியொன்றும் பெரிதாய் ஈர்க்கப்படவில்லை.
ஆனால் அதுபோன்ற ஸ்தலங்கள் நம்முடைய விசுவாச கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகளே. இயேசுவுக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில் இன்னொரு முக்கியமான ஸ்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்” (யோவான் 4:20) என்று கெர்சோம் மலையைக் குறித்து (உபாகமம் 11:29ஐ காண்க) சமாரிய ஸ்திரீ கூறினாள். எருசலேமை புனிதஸ்தலமாய் கருதி அங்கே ஆராதனை செய்யவேண்டும் என்ற யூத முறைமைக்கு முரண்பாடாய், சமாரியர்கள் கெர்சோம் மலையை புனிதமாய் கருதினர் (வச. 20). ஆனால் ஆராதனை என்பது இடத்தைப் பொருத்தது அல்ல நபர்களைப் பொருத்தது என்று இயேசு அறிவித்தார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும்” (வச. 23). மேசியாவைக் குறித்த தன்னுடைய நம்பிக்கையை அந்த பெண் வெளிப்படுத்தினாள். ஆனால் அவள் மேசியாவிடம் பேசிக்கொண்டிருப்பதை அறியாதிருந்தாள். “அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்” (வச. 26).
தேவன் எந்த மலைக்கும், பூகோள நிலப்பரப்பிற்கும் உட்பட்டவரல்ல. அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருடைய சிங்கானத்தை தைரியமாய் அண்டி, “எங்கள் பிதாவே” என்று நாம் கூப்பிடும்போது, அவர் அங்கே இருக்கிறார் என்பதே நம்முடைய மெய்யான மேன்மை.
தேவன் ஆவியாய் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்தது உங்கள் வாழ்வில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது? இந்த தருணத்தில் அவரை எந்த காரணத்திற்காகத் துதிக்கத் தோன்றுகிறது?
தகப்பனே, நான் எங்கு இருந்தாலும் என் மீதுள்ள உம்முடைய நிலையான கிருபைக்காக நன்றி.