சென்னைப் பட்டணத்தில் 2015ஆம் ஆண்டு, வரலாற்றில் இதுவரை இடம்பெறாத பெருவெள்ளம் வந்து பலரை பாதிப்பிற்குள்ளாக்கியது. வீட்டில் இனி தங்கியிருப்பது சாத்தியமல்ல என்று எண்ணிய அவர், தன் சிறு குழந்தையுடன் வெளியேறினார். அவர் பார்வையற்றவர் என்றபோதிலும் தன் மகனைக் காப்பாற்றியாக வேண்டும். தன் மகனை தன் தோள்மீது மென்மையாய் அமரச்செய்து, ஆழமான அந்த தண்ணீரில் பாதுகாப்பை நோக்கி நடக்கிறார்.
இத்தனை இடர்களையும் தாண்டி தன்னுடைய பிள்ளையைக் காப்பாற்ற ஒரு மாம்ச தகப்பன் என்னும்போது, நம்முடைய பரம தகப்பன் அவருடைய பிள்ளைகளின் மீது எந்த அளவிற்கு அக்கறை எடுத்துக்கொள்வார்! பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாசத்தில் தடுமாற்றமடைந்த நேரத்திலும் தேவன் அவர்களை எப்படி நடத்தி வந்தார் என்பதை மோசே நினைவுகூருகிறார். தேவன் அவர்களை எப்படி மீட்டார் என்றும் வனாந்திரத்தில் அவர்களை எப்படி போஷித்தார் என்றும், எதிரிகளோடு யுத்தம்செய்து அவர்களை மேகஸ்தம்பத்தினாலும் அக்கினி ஸ்தம்பத்தினாலும் எப்படி வழிநடத்தினார் என்றும் இஸ்ரவேலர்களுக்கு நினைவுபடுத்துகிறார். அவர்களுக்கு தேவன் எப்படி ஆதரவாய் செயல்பட்டார் என்று எடுத்துரைத்த மோசே, “ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல” (உபாகமம் 1:31) அவர்களை வழிநடத்தி வந்தார் என்று சொல்லுகிறார்.
இஸ்ரவேலர்களின் வனாந்திரப் பயணம் சாதாரணமானது அல்ல; விசுவாசத்திற்கு அடிக்கடி சவாலாய் அமைந்தது. ஆனால் தேவனுடைய பாதுகாப்பிற்கும் வழிநடத்துதலுக்கும் அது தெளிவான ஆதாரம். ஒரு தகப்பன் துணிச்சலோடும் உறுதியோடும் தன் மகனை மென்மையாய் தோளில் சுமப்பதுபோல தேவன் இஸ்ரவேலைச் சுமந்தார். நம்முடைய விசுவாசத்தைச் சோதிக்கும் சவால்களை சந்திக்கும்போது அதிலிருந்து நம்மைத் தூக்கிச்செல்லும் ஆண்டவர் இருக்கிறார் என்பதை நினைவுகூருவோம்.
உங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய போஷித்தலையும் பாதுகாப்பையும் எந்தெந்த வழிகளில் உணர்ந்திருக்கிறீர்கள்? உங்களை மென்மையாகவும் உறுதியோடும் தோளில் சுமக்கும் தேவன் இருக்கிறார் என்பதை அறிந்து உங்கள் பிரச்சனைகளை எப்படி சந்திக்கப் போகிறீர்கள்?
அன்பான தேவனே, நான் உணராத போதும், நீர் என்னைத் தூக்கி சுமக்கிறீர் என்பதை நினைவுகூர எனக்கு உதவிசெய்யும். உம்முடைய பெலத்திற்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றி.