திருமதி. கூட்ரிச்சின் சிந்தையில் பல ஆண்டுகளாய் அவள் கடந்து வந்த சவால்கள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைப் பாதையைக் குறித்த நினைவுகள் அவ்வப்போது வந்துவந்து போய்கொண்டிருந்தது. நீரோட்டத்தை பார்வையிட்டபடி ஜன்னலின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவள் தன்னுடைய கையேட்டில் எழுதத்துவங்கினாள். “என்னுடைய பிரியமான நாற்காலியில் அமர்ந்து, என் கால் தரையில்பட, என் இருதயம் காற்றில் பறந்தது. சூரியஒளியில் மின்னிய நீரோட்டம் தொடர்ந்து ஓடுகிறது – எங்கே என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே – உம்முடைய அளவில்லா ஆசீர்வாதத்திற்காகவும் அழிவில்லா அன்பிற்காகவும் நன்றி! அது எப்போதும் என்னை மெய்சிலிர்க்கப் பண்ணுகிறது – காணமுடியாத ஒருவரை இந்த அளவிற்கு நான் நேசிக்கிறேனே, அது எப்படி?” என்று மெய்மறந்து எழுதினாள்.
அப்போஸ்தலர் பேதுருவும் இந்த ஆச்சரியத்தை அனுபவித்துள்ளார். அவர் இயேசுவை தன் சொந்த கண்களினால் பார்த்திருக்கிறார். ஆனால் அவருடைய நிருபத்தை வாசித்தவர்கள் பார்த்ததில்லை. “அவரை நீங்கள் காணாமலிருந்தும்… அவரிடத்தில் விசுவாசம் வைத்து… சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்” களிகூருகிறோம் (1 பேதுரு 1:8). அவருடைய கட்டளையின்பேரில் அல்ல மாறாக, பரிசுத்த ஆவியின் துணையினாலே (வச. 11) நாம் அவரை நேசிக்கிறோம்; அவர் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்றும் அறிகிறோம்.
நம்மைப் போன்றவர்கள் மீது அவர் அக்கறை செலுத்துகிறார் என்பதை வெறும் கேள்விப்படுவது மட்டுமல்ல நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய காணப்படாத ஆச்சரியமான பிரசன்னத்தையும் பரிசுத்த ஆவியையும் முழுமையாய் அனுபவிப்பது.
1 பேதுரு 1:3-9ஐ மீண்டும் வாசியுங்கள். இந்த வார்த்தைகள் எந்த வகையில் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை நிஜமாக்கும் தேவனை நமக்குக் காட்டுகிறது? நமக்குள், நம் மத்தியில் இருக்கும் இயேசுவின் ஆவியை வெளிப்படையாய் அங்கீகரிக்கிறீர்களா?
பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம் அன்பின் அதிசயத்தையும் உம்முடைய குமாரனுடைய பிரசன்னத்தையும், உம்முடைய ஆவியையும் காண எனக்கு உதவிசெய்யும்.