நான் முழங்கால்படியிட்டு கண்ணீர் சிந்தினேன். “தேவனே, ஏன் என்னை நீர் கவனித்துக்கொள்வதில்லை?” என்று அழுதேன். அது கோவிட்-19 தொற்று வெகுவாய் பரவிய 2020ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட ஒருமாத காலமாய் நான் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். என்னுடைய வேலையில்லா விண்ணப்பத்தில் ஏதோ தவறு ஏற்பட்டது. அமெரிக்க அரசு அறிவித்திருந்த ஊக்கத் தொகையும் வந்து சேர்ந்தபாடில்லை. தேவன் எல்லாவற்றையும் சரிசெய்வார் என்று என் இருதயத்தின் ஆழத்தில் நம்பியிருந்தேன். அவர் என்னை உண்மையாய் நேசிக்கிறார்; என்னை பாதுகாப்பார் என்று நம்பினேன். ஆனாலும் அந்த தருணத்தில் நான் கைவிடப்பட்டதுபோல் உணர்ந்தேன்.
புலம்புவது ஒருவிதத்தில் சரியென்று புலம்பல் புத்தகம் நமக்கு காட்டுகிறது. இப்புத்தகம் கி.மு. 587இல் பாபிலோனியர்கள் எருசலேமை அழிக்கும்போதோ அல்லது அதற்கு பின்னரோ எழுதப்பட்டது. இது மக்கள் சந்தித்த பாடுகள் (3:1,19) அடக்குமுறை (1:18) மற்றும் பட்டினி (2:20; 4:10) போன்றவற்றை விவரிக்கிறது. ஆயினும், புத்தகத்தின் இடையில் நம்பிக்கையை ஏன் இழக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை ஆசிரியர் நினைவுகூறுகிறார்: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது” (வச. 22-23). இந்த கடினமான பேரழிவின் மத்தியிலும், தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று ஆசிரியர் நினைவுகூறுகிறார்.
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிறவர்களுக்கும் கர்த்தர் நல்லவர் (வச. 25) என்பதை நம்புவது சிலநேரங்களில் கடினமாய் தெரிகிறது. குறிப்பாய், நம்முடைய பாடுகளுக்கு முடிவேயில்லை என்று கருதும் நேரங்களில் தேவனை நம்புவது கடினம். அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்னும் நம்பிக்கையுடன் அவரிடத்தில் புலம்பலாம். அவர் நம்மை நிச்சயமாய் கண்ணோக்கிப் பார்ப்பார்.
தேவனை நம்புவதற்கு உனக்கு தடையாயிருப்பது என்ன? அவரிடத்தில் கண்ணீர் சிந்துவதற்கு எது ஆறுதலாய் இருக்கிறது?
தகப்பனே, எனக்கு இப்போது நீர் தேவை. என்னுடைய கடினமான பாதையைக் கடந்துசெல்ல எனக்கு உதவிசெய்யும்.