ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த மருத்துவ நிபுணரான கேத்ரீன் ஹம்லினைக் குறித்து பத்திரிக்கையில் வெளியான அவருடைய இரங்கல் செய்தியின் மூலம் தெரிந்துகொண்டேன். குழந்தைப் பிறப்பின்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படும் பெண்களைத் தாக்கும் ஒருவகையான மகப்பேறு வியாதிக்கு சிகிச்சையளிக்கும் உலகின் முதல் மருத்துவமனையை எத்தியோப்பியாவில் நிறுவியவர்களே இந்த கேத்ரீனும் அவருடைய கணவரும். அதில் 60,000க்கும் அதிகமான பெண்களுக்கு சிகிச்சையளித்த பெருமை இவரைச் சேரும்.
மருத்துவசேவை புரிந்துகொண்டிருந்த தன்னுடைய 92ஆம் வயதிலும், தன்னுடைய ஒவ்வொரு நாளையும் தேனீர் கோப்பையுடனும் வேதபாடத்துடனும் துவங்குவது கேத்ரீனின் வழக்கம். அவரை பேட்டியெடுத்தவர்களிடம், தான் தேவன் கொடுத்த வேலையைச் செய்யும் ஒரு சாதாரண விசுவாசி என்று பதிலளித்தார்.
அவருடைய சிறப்பான வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில், தேவனை மறுதலிப்பவர்களும் நம்முடைய “நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம்… தேவனை மகிமைப்படுத்தும்படி” (1 பேதுரு 2:12), என்று வேதம் விசுவாசிகளை வாழத் தூண்டும் வெகுச் சிறப்பான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.
நம்மை அந்தகார இருளிலிருந்து அழைத்து அவருக்கு சொந்தமாக்கிக் கொண்ட தேவனுடைய ஆவியின் வல்லமையினால், நம்முடைய சேவைகளையெல்லாம் வல்லமையுள்ள விசுவாச சாட்சிகளாக மாற்றமுடியும். தேவன் நமக்கு கொடுத்துள்ள வாஞ்சையையும் திறமைகளையும் அர்த்தமுள்ளதாய் மாற்றக்கூடிய வகையில், தேவ ஜனத்தை அவரண்டை திருப்புவதற்கு அவைகளை நேர்த்தியாய் பயன்படுத்துவோம்.
தேவன் உன்னை எதைச் செய்வதற்காக அழைத்தார்? அதை இயேசுவின் நாமத்தில் இன்று எப்படி செய்வீர்கள்?
இயேசுவே, இன்று என்னுடைய வார்த்தைகளிலும் செய்கைகளிலும் உம்முடைய அன்பும் கிருபையும் வெளிப்படுவதாக.