வரலாற்றின் மிக பிரபலமான “பலிமாடு” அநேகமாக இவளாகத்தான் இருக்கவேண்டும். அவளின் பெயர் டெய்சி, மேட்லின், அல்லது க்வெண்டோலின் (ஒவ்வொரு பெயரும் பரிந்துரைக்கப்பட்டது) போன்றவற்றில் எதுவென்று சரியாய் தெரியவில்லை. ஆனால் 1871ஆம் ஆண்டு சிகாகோ நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்களை வீடில்லாதவர்களாய் மாற்றிய பெரும் தீ விபத்திற்கு காரணம், ஒ லிரி என்பவருக்கு சொந்தமான இந்த பசுமாடுதான் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. வீசிய காற்றினால் மளமளவென்று மரவீடுகளில் பரவிய நெருப்பு, மூன்று நாட்கள் எரிந்து, முன்னூறுபேரை பலியாக்கியது.
மாட்டுக்கொட்டகையில் இருந்த விளக்கை இந்த பசுமாடு தட்டிவிட்டதினால்தான் தீ பற்றிக்கொண்டது என்று பல ஆண்டுகளாய் நம்பப்பட்டு வந்தது. மேற்படியான விசாரணையில், 126 ஆண்டுகள் கழித்து, இந்த பசுமாடும் அதின் உரிமையாளரும் குற்றமற்றவர்களென்று நிருபிக்கப்பட்டனர். அவர்களின் பக்கத்து வீட்டிலிருந்தே தீ பரவியுள்ளது என்று நகரத்தின் தீயணைப்பு மற்றும் காவல் துறையினரால் கண்டறியப்பட்டது.
நீதி, உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அது எவ்வளவு கடினம் என்பதை வேதாகமமும் ஒப்புக்கொள்கிறது. சங்கீதம் 13இல் “எதுவரைக்கும்?” என்னும் கேள்வி மீண்டும் மீண்டும் நான்கு தரம் இடம்பெற்றுள்ளது: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?” (வச. 1-2). தன்னுடைய புலம்பலின் இடையில் விசுவாசிப்பதற்கும் நம்புவதற்குமான காரணத்தை தாவீது கண்டறிகிறார்: “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;. உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.” (வச. 5).
நீதி தாமதித்தாலும், தேவனுடைய கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை. அவரை நம்பி அவரில் நாம் தற்காலிகமாய் அல்ல, நிரந்தரமாய் இளைப்பாறுதலடையலாம்.
அவருடைய மாறாத கிருபையை தேவன் உங்களுக்கு எப்படி காண்பித்துள்ளார்? அவர் மீதான நம்பிக்கையை இன்று எவ்வாறு வெளிப்படுத்தப்போகிறீர்கள்?
அன்புள்ள தேவனே, நீர் கிரியை செய்வதை பார்க்கமுடியவில்லையென்றாலும், உம்மை நம்ப எனக்கு உதவிசெய்யும். உம்முடைய நன்மையிலும் கிருபையிலும் என்னை இளைப்பாறப் பண்ணினதற்காய் நன்றி.