“தேவன் அழுகிறார்” பில் ஹேலியின் பத்து வயது மகள் இயேசுவில் பலதரப்பட்ட விசுவாசிகள் குழுவுடன் மழையில் நின்றபோது முணுமுணுத்த வார்த்தைகள் அவை. அவர்கள் தேவனைத் தேடவும், அமெரிக்காவிலுள்ள இன வேறுபாட்டின் மரபுகளை புரிந்துக்கொள்ளவும் வந்திருந்தனர். முன்னாள் அடிமைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் நின்றபோது அவர்கள் ஜெபத்தில் கைகோர்த்தார்கள். பின்னர் திடீரென்று காற்று வீசத் தொடங்கியது மழை பெய்யத் தொடங்கியது. தலைவர் இனரீதியான ஒற்றுமைக்காக அழைப்புவிடுத்தபோது மழை இன்னும் அதிகமாக பெய்யத் தொடங்கியது. ஒற்றுமையையும், மன்னிப்பையும் கொண்டுவருவதற்காக தேவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என கூடிவந்தவர்கள் நம்பினர்.
கல்வாரியிலும் அப்படியே நடந்தது – தேவன் செயல்பட்டு கொண்டிருந்தார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு தனது கடைசி சுவாசத்தை சுவாசித்தபோது, “பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது, கல்லறைகளும் திறந்தது” (மத்தேயு 27: 51-52). இயேசு யார் என்பதை சிலர் நிராகரித்தாலும் அவரைக் காவல்செய்ய நியமிக்கப்பட்ட ஒரு நூற்றுக்கதிபதி வேறு முடிவெடுத்திருந்தார். “நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.” (வச. 54)
இயேசுவின் மரணத்தில் தேவன் தன்னை விசுவாசிக்கின்ற அனைவருக்கும் பாவ மன்னிப்பை வழங்கும் வேலையில் இருந்தார். “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல் கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி…” (2 கொரிந்தியர் 5:19). ஒருவருக்கொருவர் மன்னிப்பை வழங்குவதை விட தேவனால் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதை நிரூபிக்க சிறந்த வழி வேறென்னென இருக்க முடியும்?
தேவனிடமிருந்து நீங்கள் பெற்ற மன்னிப்பை மற்றவர்களுடனும் உங்களிடமிருந்து வேறுபட்டவர்களுடனும் கூட எந்த வழிகளில் பகிர்ந்துள்ளீர்கள்? இயேசுவின் மரணம் மூலம் நீங்கள் தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெறவில்லை என்றால் இன்று அதை பெற்றுக்கொள்வதிருந்து உங்களை துரமாக்குவது எது?
பிதாவே, இயேசுவை அனுப்புவதன் மூலம் நான் மன்னிக்கப்படும்படி நீர் உலகத்தை அதிகமாய் அன்புகூர்ந்ததற்காக உமக்கு நன்றி. நான் வாழும் முறையால் மன்னிப்பை மற்றவர்களிடம் வெளிப்படுத்த எனக்கு உதவும்.