அவர்களை “ஒளியைப் பாதுகாப்பவர்” என்று அழைத்தனர். அமெரிக்கா தேசத்தில், வடக்கு கரோலினாவின் கடற்கரையில் அமைந்துள்ள ஹட்டெராஸ் தீவுகளின் முனையிலுள்ள கலங்கரை விளக்கத்தில், 1803 ஆம் ஆண்டிலிரு  ந்து, அந்த விளக்கு மையத்தை பராமரித்து வந்தவர்களுக்காக, ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. தற்சமயம், கடற்கரை அரிப்பு காரணமாக, அந்த முழு அமைப்பும் உள்பகுதிக்கு மாற்றப் பட்டுள்ளது. விளக்கு பாதுகாப்பவர்களின் பெயர்கள், பழைய அஸ்திபார கற்களில் பதிக்கப்பட்டு, புதிய கட்டடத்திலுள்ள ஓர் அறைவட்ட வடிவ அரங்கில், பார்வையாளர்கள் பார்க்கும்படி வைக்கப் பட்டுள்ளது. இன்றைய பார்வையாளர்கள் அந்த சரித்திரம் படைத்த விளக்கு பாதுகாவலர்களின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி, இந்த கலங்கரை விளக்கின் மீதும் “கவனம் செலுத்தவும்” என்று அங்கே வைக்கப் பட்டுள்ள தகடுகளில் எழுதப் பட்டுள்ளது.

மெய்யான ஒளியைத் தருபவர் இயேசு கிறிஸ்து. அவர், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” (யோ.8:12) என்றார். இது யாவரும் பெற்றுக் கொள்ளக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒளியைப் படைத்தவரும், ஜீவனைத்தருபவரும், தன்னை இவ்வுலகிற்கு அனுப்பினவருமாகிய பரலோகத் தந்தைக்கும் தனக்கும் உள்ள உறவை உறுதிபடுத்தவே இயேசு இதனைக் கூறினார்.

நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய போதனைகளை கடைபிடித்தால், நாமும் தேவனோடுள்ள உறவைப் புதுப்பித்துக் கொள்கின்றோம், அவர் நமக்கு புதிய வல்லமையையும், நோக்கத்தையும் தருகின்றார். வாழ்வை மாற்றும் அவருடைய அன்பு “மனுஷருக்கு ஒளியாயிருந்து” (யோவா. 1:4), நம்மைப் பிரகாசிக்கச் செய்து, நம் மூலம் இருளும், ஆபத்தும் நிரம்பிய உலகில் பிரகாசிக்கின்றது.

இயேசுவைப் பின்பற்றும் நாம், “ஒளியைப் பாதுகாப்பவர்கள்”. நம்மில் அவருடைய ஒளி பிரகாசிப்பதை பிறர் காணட்டும், ஜீவனையும் நம்பிக்கையையும் தருபவர் அவர் ஒருவரே என்பதை அவர்களும் கண்டுபிடிக்கட்டும்!