ஒரு திரைப்படத்தில் இயேசுவாக நடிக்க வேண்டுமானால், அதனை எப்படிச் செய்ய முற்படுவாய்? இது தான் புரூஸ் மார்சியானோ எதிர் நோக்கிய சவால். 1993 ஆம் ஆண்டு, “மத்தேயு” என்ற வேதாகம திரைப் படத்திற்கு, அவன் இயேசுவாக நடித்தான். அவனுடைய நடிப்பின் மூலம் பல மில்லியன் பார்வையாளர்கள் இயேசுவைக் குறித்து தீர்மானிப்பார்கள் என்பதை உணர்ந்த அவனுக்குள் கிறிஸ்துவைப் பற்றி “மிகத்துல்லியமாக” தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவன் முழங்காலில் நின்று ஜெபித்தான், இயேசுவை நன்கு எனக்கு காட்டும் என வேண்டினான்.
புரூஸ், எபிரெயர் முதலாம் அதிகாரத்திலிருந்து ஒரு தெளிவைப் பெற்றுக் கொண்டான். நம்முடைய பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனை, மற்றவர்களைப் பார்க்கிலும் “ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்” என்பதாக எபிரெயரை ஆக்கியோன் எழுதுகின்றார் (1:9). நாம் கொண்டாடக் கூடிய இந்த மகிழ்ச்சி, நாம் முழு மனதுடன் பிதாவோடு இணைக்கப்பட்டுள்ளதால் வரும் சந்தோஷத்தால் கிடைக்கும். இத்தகைய மகிழ்ச்சியினால் இயேசுவின் இருதயம் நிரப்பப்பட்டதாக அவருடைய வாழ் நாள் முழுவதும் இருந்தது. எபிரெயர் 12:2ல் கூறப்பட்டுள்ளபடி, “அவர் தமக்கு முன் வைத்திருந்த ச ந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்”.
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் காரியத்தைஎடுத்துக் கொண்ட புரூஸ், வித்தியாசமான மகிழ்ச்சி நிரம்பிய இரட்சகரின் காட்சிகளைக் கொடுத்தார். அதன் விளைவாக அவன் “புன்னகை ததும்பும் இயேசு” என்று அழைக்கப் பட்டான். நாமும் முழங்காலில் நின்று, “இயேசுவே என்னை உம்மைப் போல் மாற்றும்” என்று கேட்போமாக. அவர் நம்மை அவருடைய குணங்களினால் நிரப்புவார், நம்மைக் காணும் மக்கள் இயேசுவின் அன்பை நம்மில் காண்பர்.
இயேசுவை நீ எப்படிப் பட்டவராகக் காண்கின்றாய்? அதனை நீ எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும்? அவருடைய இருதயத்தை இவ்வுலகிற்கு காண்பிக்கும்படி நீ எவ்வாறு அவருடைய சார்பாக திகழப் போகின்றாய்?
அன்புள்ள இயேசுவே, எங்களை உம்மைப் போல மாற்றும் என கெஞ்சி நிற்கின்றோம், இன்று எங்களில் உம்முடைய இருதயத்தைப் பிறர் காணட்டும். எங்களின் பேச்சிலும் செயலிலும் நாங்கள் உம்முடைய மகிழ்ச்சியைக் காட்ட உதவியருளும்.