முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ், தன்னுடைய மரணத்திற்கு முன்பு தன்னுடைய மகனிடம், “நான் இயேசுவை விசுவாசிக்கின்றேன், அவரே என் இரட்சகர், ஆகையால் மரணத்தைக் குறித்த பயம் எனக்கில்லை” என்றார். இந்த மிகச் சிறந்த நம்பிக்கை தரும் வார்த்தைகள், உறுதியான, ஆழ்ந்த விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றன. இயேசுவை அறிந்து கொண்டதால் கிடைக்கப் பெற்ற தேவனுடைய ஈவாகிய சமாதானத்தை, அவள் தன்னுடைய மரணத்தருவாயிலும் அநுபவித்தாள்.
முதலாம் நூற்றாண்டில், எருசலேமில் வாழ்ந்த சிமியோனும் ஆழ்ந்த சமாதானத்தை இயேசுவின் மூலம் பெற்றுக் கொண்டான். பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் சிமியோன் தேவாலயத்திற்கு வருகின்றான். அங்கு மேரியும், யோசேப்பும், நியாயப் பிரமாணத்தை நிறைவேற்ற, விருத்த சேதனம் செய்யும்படி, இயேசு பாலகனை தேவாலயத்திற்கு கொண்டு வருகின்றனர். வேதாகமத்தில் சிமியோனைப் பற்றி வேறெங்கும் குறிப்பிடவில்லையெனினும், லூக்கா அவனைக் குறித்து கூறியிருப்பதிலிருந்து, அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று கூறமுடியும். அவன் நீதிமான், தேவபக்தி நிறைந்தவன், மேசியாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தவன், “அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்” (லூக். 2:25). ஆயினும் அவன், இயேசுவைக் காணும் வரையிலும், சமாதானத்தை (ஷலோம்) முழுமையாகப் பெற்றுக் கொள்ளவில்லை.
இயேசுவைத் தன் கரங்களில் ஏந்தியவனாக, சிமியோன் தேவனைப் போற்றி பாடுகின்றான், தன்னுடைய முழுதிருப்தியையும் வெளிப்படுத்துகின்றான், “ஆண்டவரே, உமது வார்த்தையின் படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போக விடுகிறீர்; ….தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” (வ.29-32) என்று பாடுகின்றான். அவன் தேவ சமாதானத்தைப் பெற்றுக் கொண்டான் ஏனெனில், இவ்வுலகிற்கு நம்பிக்கைப் பிறந்ததை அவனால் ணமுடிந்தது.
நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் கொண்டாடும் நாம், தேவன் தரும் ஈவாகிய சமாதானத்தில் மகிழ்ந்து களிகூருவோம்.
இயேசுவை அறிந்து கொள்வதால் வரும் ஆழ்ந்த மன திருப்தியையும் முழுமையையும் அநுபவித்துள்ளாயா? தேவன் தரும் ஈவாகிய சமாதானத்தை இன்று எவ்வாறு கொண்டாடப் போகின்றாய்?
அன்புள்ள பிதாவே, எங்களுக்குச் சமாதானத்தை தரும் ஈவாக இயேசுவை தந்தபடியால் உமக்கு நன்றி கூறுகின்றேன்.