ஆதரவற்ற குழந்தைகளுக்கு உடைகள் வழங்கும் நிகழ்வில், குழந்தைகள், ஆர்வத்தோடும், நன்றியோடும், தங்களுக்குப் பிடித்தமான நிறமும், அளவுமுள்ள உடைகளைத் தேடியெடுத்தனர், இது, அவர்களுக்குத் தன்நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த முயற்சியை எடுத்த ஒருவர் கூறும் போது, புதிய உடைகளை அணிந்த குழந்தைகள், தாங்கள் சுற்றத்தாரால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றனர் என்பதை உணர்ந்தனர், அந்தக் குளிர்ந்த கால சூழலில், அது அவர்களுக்கு வெப்பத்தைக் கொடுத்தது.
அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் ஒரு அங்கி தேவைப்பட்டது. அவர், தீமோத்தேயுவுக்கு எழுதும் போது, “துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும்… எடுத்துக் கொண்டு வா” (2 தீமோ. 4:13) என்கின்றார். ரோமர்களின் சிறைச்சாலையில் அகப்பட்டு, குளிரினால் கஷ்டப்பட்ட பவுலுக்கு வெப்பமும், ஒரு துணையாளரும் தேவைப் பட்டது. அவர் ஒரு ரோம நியாயாதிபதி முன் நின்ற போது “நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடே கூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்” என்பதாகப் புலம்புகின்றார் (வச. 16). இந்த ஊழியக்காரனின் உண்மையான, வேதனை தரும் வார்த்தைகள் நம் இருதயத்தை குத்துகின்றது.
ஆயினும், பவுல் தன்னுடைய வியத்தகு ஊழியத்தை முடித்தபின்னர், தன்னுடைய கடைசிக் கடிதத்தை முடிக்கும் போது, அவருடைய எண்ணங்கள் சுய பரிதாபத்திலிருந்து துதியாக மாறுகின்றதைக் காண்கின்றோம், “கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப் படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்” (வச. 17) என்கின்ற வார்த்தைகள் நம்முடைய இருதயத்தைத் தேற்றுகின்றன.
நீயும் பிரச்சனைகளின் மத்தியில் இருக்கின்றாயா? வெப்பத்தைக் கொடுக்க சரியான உடையின்றி இருக்கின்றாயா? உன்னைத் தேற்றக் கூடிய நண்பர்களின்றி தவிக்கின்றாயா? தேவனை நோக்கிப் பார், அவர் உனக்கு வாழ்வளிக்கவும், உனக்குத் தேவையானவற்றைக் கொடுக்கவும், உன்னை மீட்டுக் கொள்ளவும் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். ஏன்? அவருடைய மகிமைக்காகவும் அவருடைய ராஜ்ஜியத்தில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றவும், நமக்குத் துணையாக இருக்கின்றார்.
உன்னுடைய வாழ்வின் எந்தப் பகுதியில் தேவனுடைய பெலப்படுத்தும் வல்லமை உனக்குத் தேவையாய் இருக்கின்றது? நீ அவரைத் துதிக்கும் போது, உன்னுடைய பார்வை எப்படி மாறுகின்றது?
எங்களுடைய பெலனாகிய தேவனே, எங்களுடைய வாழ்வின் சூழல்கள் எங்களை மேற்கொள்ளும் போது, உம்மைத் துதிக்கும்படி செய்து, பிரச்சனைகளை மேற்கொள்ளுவதற்கு பெலனளிக்கும்படி எங்களோடிரும்.