ஏட்ரியனும், அவனுடைய குடும்பமும் வாழ் ந்த நாட்டில், இயேசு கிறிஸ்துவின் மீது அவர்களுக்கு இருந்த விசுவாசத்தின் நிமித்தம் அவர்கள் துன்பங்களைச் சகித்தனர். ஆனால் இவற்றின் மத்தியிலும் அவர்கள் கிறிஸ்துவின் அன்பைக் காட்டினர். தீவிரவாதிகள் தங்களின் பயிற்சி மையமாக பயன்படுத்தி, நொருக்கிய அந்த ஆலய வளாகத்தில் நின்றவாறு அவர், “இன்று பெரிய வெள்ளிக் கிழமை, இயேசு நமக்காகச் சிலுவையில் பாடுகளைச் சகித்தார் என்பதை நினைவு கூருகின்றோம்” என்றார், பாடுகள் என்பது விசுவாசிகள் புரிந்து கொண்ட ஒன்று. அவருடைய குடும்பம் அவ்விடத்திலேயே இருக்கும்படி தெரிந்து கொண்டது, “நாங்கள் இவ்விடத்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறோம்” என்றார். இயேசு சிலுவையில் மரித்தபோது அருகிலிருந்த பெண்களை, இந்த விசுவாசிகளும் பின்பற்றுகின்றனர் (மாற்.15:40). அங்கு மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும் தைரியமாக அங்கிருந்தனர். ஒரு தேச துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்ட இயேசுவின் நண்பர்களையும், குடும்ப நபர்களையும் கூட அவர்கள் தரக்குறைவாக பேசவும், தண்டிக்கவும் கூடும். ஆயினும் அந்த பெண்கள் இயேசுவின் மீதுள்ள அன்பை அவரோடு கூட இருப்பதன் மூலம் வெளிப்படுத்தினர். “அவர் கலிலேயாவிலிருந்த போது, அவருக்குப் பின் சென்று ஊழியம் செய்துவந்த” (வ.40) அந்த பெண்கள் அவருடைய கடைசி நேர ஆழ்ந்த வேதனையின் போது, அவரோடேயிருந்தனர்.
இந்த நாளிலும் நமது இரட்சகர் நமக்காகச் செய்துள்ள மிகப் பெரிய ஈவை நாம் நினைத்துப் பார்ப்போம், அவர் சிலுவை மரணம் வரை சென்று, நமக்காக செய்த தியாகத்திற்காக, நாமும் பலவகையான சோதனைகளைச் சந்திக்கும் போது, இயேசுவுக்காக எப்படி உறுதியாய் நிற்கலாம் என்பதை மனதில் இறுத்திக் கொள்வோம் (யாக்.1:2-4). உலகெங்கும் விசுவாசிகள் கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்திற்காக பாடுகளைச் சகித்ததை நினைத்துக் கொள்வோம். ஏட்ரியன் கேட்டுக் கொண்டது போல, “நீங்களும் எங்களோடு கூட ஜெபத்தில் இணைந்து கொள்ள முடியுமா?”
நீ வாழும் இடத்தில் கிறிஸ்துவுக்காக உறுதியாக இருத்தல் என்பது எப்படிப்பட்டது? உலகெங்கும் துன்பங்களைச் சந்திக்கும் விசுவாசிகளுக்கு நீ எவ்வாறு துணையாக நிற்க முடியும்?
அன்புள்ள இரட்சகரே, நீர் எங்களைப் பாவத்திலிருந்து இரட்சிப்பதற்காக மரணத்தையும் ஏற்றுக் கொண்டீர். இந்த அற்புதமான ஈவுக்காக, இந்த நினைவு நாளில் எங்களுக்கு நன்றியுள்ள இருதயத்தைத் தந்தருளும்.