கடந்த காலத்தில், இயேசுவின் விசுவாசிகளால் காயப்படுத்தப்பட்ட என்னுடைய தாயார், நான் என்னுடைய வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தபோது, கோபமுற்றார், “ஆகவே நீ இப்பொழுது என்னை நியாயம் தீர்ப்பாயோ? அது உன்னால் முடியாது” என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டார், ஓர் ஆண்டு முழுவதும் அவர் என்னிடம் பேசவே இல்லை. நான் மிகவும் வருந்தினேன், ஆனால் நான் தேவனோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டேன், அது எல்லா உறவுகளைக் காட்டிலும் விலையேறப் பெற்றதாக இருந்தது. அவர் என்னுடைய அழைப்பை மறுக்கும் ஒவ்வொரு வேளையும் நான் தேவனிடம் ஜெபிப்பேன், நான் அவர்கள் மீது அன்பாயிருக்க எனக்கு உதவியருளும் என்று கேட்டேன்.
இறுதியில் நாங்கள் சமாதானமானோம். சில மாதங்களுக்குப் பின்னர் அவர், “நீ மாறிவிட்டாய், நான் உன்னிடமிருந்து இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றேன்” என்றார். சீக்கிரத்தில் அவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டார், எஞ்சிய நாட்களில் தேவனையும் பிறரையும் நேசித்து வாழ்ந்தார்.
இயேசுவிடம் ஓடிச் சென்று, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட ஒரு மனிதன், துக்கத்தோடே திரும்பிச் சென்றான், ஏனெனில் அவன் தன்னுடைய ஆஸ்தியை விட்டு விட மனதில்லாதிருந்தான் (மாற். 10:17-22), அதேப் போன்று நானும் அவரைப் பின்பற்றும்படி எல்லாவற்றையும் விட்டு விட முடியாமல் போராடிக் கொண்டிருந்தேன்.
தேவனை விட, நாம் அதிகமாக நேசிக்கும் மக்களையும் பொருட்களையும் நம்மால் எளிதில் விட்டு விட முடியாது (வ.23-25). ஆனால் நாம் இவ்வுலகில் விட்டு விடுபவைகளின் அல்லது இழப்பவைகளின் மதிப்பு இயேசுவோடு நாம் அநுபவிக்கப்போகும் நித்திய வாழ்வை விட நிச்சயமாக அதிகமில்லை. நம் மீது அன்புள்ள தேவன், எல்லா ஜனங்களையும் மீட்பதற்காக தன்னையே பலியாகத் தந்தார், அவர் நம்மை தம்முடைய சமாதானத்தினால் மூடிக்கொள்கின்றார், தம்முடைய விலையேறப் பெற்ற, மாறாத அன்பினால் நம்மைத் தாங்குகின்றார்.
இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தபோது, எந்த கடினமான காரியங்களை நீ விட்டாய் அல்லது எதை இழந்தாய்? இயேசுவை நம்புவதைக் காட்டிலும், உலகப் பிரகாரமான வசதிகளையும், ஆஸ்தியையும், மக்களையும் நம்புவது ஏன் இலுகுவாகத் தோன்றுகிறது?
தேவனே, எங்களுடைய தகுதிக்கும் மேலாக எங்களை நேசிப்பதற்காகவும், இவ்வுலகத்திலுள்ள எல்லாவற்றையும், எல்லாரையும் காட்டிலும் நீரே விலையேறப் பெற்றவர் என்பதை எங்களுக்குக் காட்டியதற்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன்.