பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய மனைவி வாங்கிய ஒரு பொருளுக்கான தள்ளுபடியைப் பெற்றாள். அதனை அவள் எதிர்பார்க்கவில்லை, அதனைக் குறித்து மெயில் வந்தது. அதே நேரத்தில் அவளுடைய சினேகிதியும் ஒரு நாட்டிலுள்ள பெண்கள் தொழில் செய்வதில் ஆர்வமுடையவர்களாகவும், கல்வி மற்றும் வர்த்தகம் மூலம் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும்படி தேவையிலிருப்பதாகவும் பகிர்ந்து கொண்டாள். ஆயினும் அவர்களின் முக்கியமான தடையாக இருப்பது பொருளாதாரம்.

எனவே, என்னுடைய மனைவி, அந்தத் தள்ளுபடி தொகையோடு, ஒரு சிறிய கடனையும் பெற்று, இந்த பெண்களுக்கு உதவும் ஓர் ஊழியத்திற்குக் கொடுத்தாள். அந்த கடனைத் திருப்பிச் செலுத்திய போது, மீண்டும், மீண்டும் கடனைப் பெற்று அதற்குக் கொடுத்தாள். இதுவரை இருபத்தேழு முறை இவ்வாறு வழங்கியுள்ளாள். இதுவரை அவள் சந்தித்திராத, அந்த பெண்களின் வாழ்வு வளம் பெற்றுள்ளது என்ற செய்தியை அவள் கேட்கும் போது அவளின் முகத்தில் ஏற்பட்ட சிரிப்பை, அவள் அநுபவித்த வேறெந்த காரியத்திலும் நான் கண்டதில்லை.

“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7) என்ற வாக்கியத்தின் முதல் சொல்லிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதை நாம் கேட்டிருப்போம், அது சரியானதும் கூட. நம்முடைய கொடுத்தலுக்கும் ஒரு சிறப்பு பண்பு உள்ளது. ஒருவன் கொடுக்கும் போது “விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல”, நாம் பெருக விதைக்க வேண்டும் (வ.6-7), அதாவது மகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாய் கொடுப்போம், ஆனால் நாம் கொடுப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியை நமது முகங்கள் காட்டும்.