தன்னுடைய ஐம்பத்திமூன்றாம் வயதில், சோனியா தன்னுடைய தொழிலையும், தன் தேசத்தையும் விட்டு விட்டு, அடைக்கலம் தேடி, வேறு இடத்திற்கு பிரயாணம் பண்ணும் ஒரு கூட்டத்தினரோடு சேர்ந்து கொள்ளும்படி தள்ளப்பட்டாள். ஒரு தீவிரவாதக் கூட்டம் அவளுடைய உறவினரான ஒருவரைக் கொலை செய்ததோடு, அவளுடைய பதினேழு வயது மகனை, அவர்களின் கூட்டத்தில் சேரும்படி கட்டாயப் படுத்தியது. சோனியாவிற்கு அவ்விடத்தைவிட்டு தப்பிச் செல்வதைத் தவிர வேறு வழிதோன்றவில்லை.  “தேவனே, நான் எது தேவையோ அதைச் செய்வேன்,…..எதுவானாலும் செய்வேன், ஆனால் நானும் என்னுடைய மகனும் பட்டினியால் சாகக் கூடாது,……..அவன் அங்கே ஒரு சாக்கினுள் கட்டுண்டவனாகவோ அல்லது ஓர் ஓடையில் தூக்கி வீசப்பட்டவனாகவோ சாவதை விட, இங்கே கஷ்டப் பட்டாலும் அதையே விரும்புகின்றேன்” என்று ஜெபித்தாள்.

சோனியா மற்றும் அவளுடைய மகனுக்கும், அவளைப் போன்று அநியாயத்தையும் பேரிழப்பையும் சந்திக்கின்ற அநேகருக்கும் வேதாகமம் என்ன கூறுகின்றது? இயேசுவின் வருகையைக் குறித்து யோவான் ஸ்நானகன் அறிவித்தபோதே, நமக்கும், சோனியாவிற்கும், இந்த உலகிற்கும் நற்செய்தியைக் கூறினார், “கர்த்தருக்கு வழியை ஆயத்தப் படுத்துங்கள்” என்று அறிவித்தார் (லூக். 3:3). மேலும் அவர் இயேசு வரும் போது, அவர் மிகுந்த வல்லமையுள்ளவராய் நம்மை முற்றிலும் விடுவிப்பார் என்றார், இந்த விடுதலையை வேதாகமம் இரட்சிப்பு எனக் குறிப்பிடுகின்றது.

இரட்சிப்பு என்பதன் மூலம் நம்முடைய பாவம் நிறைந்த இருதயத்திற்கு சுகம் கொடுப்பதோடு, ஒரு நாள் இவ்வுலகின் அத்தனை கொடுமைகளிலிருந்தும் விடுதலையைக் கொடுப்பார். அனைத்து சரித்திரமும் மாறும், ஒவ்வொரு மனித அமைப்பும் மாற்றம் பெறும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவன் தரும் மாற்றம் வரும். “மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்” (வச. 5) என்று யோவான் கூறினார்.

நாம் எத்தகைய கொடுமைகளைச் சந்தித்தாலும், கிறிஸ்துவின் சிலுவையும் உயிர்த்தெழுதலும், நாம் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வோம் என உறுதியளிக்கின்றன. ஒரு நாள், அவர் தரும் பூரண விடுதலையை நாம் அநுபவிப்போம்.