“நான் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன்” என்று என்னுடைய இரண்டு வயது பேரன், மகிழ்ச்சியில் கத்திக் கொண்டே, என்னுடைய கரங்களில் ஒரு பெட்டியைத் திணித்தான். “அவனே அதைப் தெரிந்தெடுத்தான்” என்று என்னுடைய மனைவி சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அந்தப் பெட்டியைப் பிரித்த போது, அங்கு அவனுக்குப் பிடித்தமான கார்டூன் அங்கத்தினரின் உருவம், கிறிஸ்மஸ் பரிசாக வைக்கப்பட்டிருந்தது. “நான் பார்க்கலாமா?” என்று ஆவலோடு கேட்டான். பின்னர் அவன் அந்த, “என்னுடைய” பரிசை வைத்து அந்த நாள் முழுவதும் விளையாடினான், நான் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டேன்.
கடந்த காலங்களில், நான் விரும்பியவர்களுக்குக் கொடுத்த பரிசுகளை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படித்த போது, என்னுடைய மூத்த சகோதரனுக்கு இசை ஆல்பம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தேன், அதைக் கேட்பது எனக்கு மிகவும் விருப்பமாயிருக்கும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னும் தாராளமாகக் கொடுக்கும்படி, தேவன் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார் என்று நினைத்துப் பார்த்தேன்.
கொடுப்பது என்பது நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு. “மற்றெல்லாக் காரியங்களிலும் நீங்கள் பெருகியிருக்கிறது போல, இந்த தர்மக் காரியத்திலும் பெருகவேண்டும்” என்று பவுல் எழுதுகின்றார்
(2 கொரி. 8:7). நம்மிடம் இருப்பவையெல்லாம் தேவன் தந்தவை என்று எண்ணி, நாம் கொடுக்கும் போது கிருபை பெருகும். ஏனெனில், “வாங்குகிறதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே பாக்கியம்” என்று இயேசு கூறியிருக்கிறாரே. (அப். 20:35).
தேவன் மிகச் சிறந்த தன்னலமற்ற ஈவை, நமக்காகத் தந்துள்ளார். தன்னுடைய ஒரேகுமாரனை, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிக்கும்படி ஒப்புக்கொடுத்து, பின்னர் அவரை உயிரோடு எழுப்பினார். இந்த விலையேறப்பெற்ற ஈவைப் பெற்றுக்கொண்டவர்கள், அளவற்ற செல்வத்தைப் பெற்றுக் கொண்டவர்கள். நம்முடைய இருதயம் தேவனுக்கு நேராகத் திருப்பப்படும் போது, நம்முடைய கரங்கள் அன்போடு மற்றவர்களுக்குக் கொடுக்கும்.
நீ கொடுப்பதில் இன்னும் என்னென்ன வழிகளில் வளர வேண்டியுள்ளது? இன்றைக்கு என்ன செய்ய திட்டமிட்டுள்ளாய்?
நன்றி, பிதாவே, மிகச் சிறந்த ஈவாக உமது குமாரனைத் தந்தீர்! உம்முடைய தயாள குணத்தை, நானும் மற்றவர்களிடம் காட்ட எனக்கு உதவியருளும்.