“தீஸ் ஆர் த ஜெனரேஷன்ஸ்” என்ற புத்தகத்தில் திரு.பியே என்பவர் தேவனுடைய உண்மையையும், இருளையும் ஊடுருவிச் செல்லும் அவருடைய சுவிசேஷத்தின் வல்லமையையும் பற்றி விளக்குகின்றார். அவருடைய தாத்தாவும், பெற்றோரும், மற்றும் அவருடைய சொந்த குடும்பமும், கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தை பரப்பியதற்காக பாடுப்பட்டனர். நண்பர் ஒருவருக்கு கிறிஸ்துவைப் பற்றி கூறியதற்காக திரு.பியே சிறையிலடைக்கப் பட்டார். ஆனால், அவருடைய விசுவாசம் வளர்ந்தது. இதே போலவே அவருடைய பெற்றோரும் அடைக்கப்பட்டிருந்த ஒரு கொடுமையான முகாமில் அவர்களும் கிறிஸ்துவின் அன்பைக்குறித்து பகிர்ந்து கொண்டனர். திரு.பியேவின் வாழ்விலும் யோவான் 1:5ல் கூறப்பட்டுள்ள “அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை” என்ற வார்த்தை உண்மையாயிருந்தது.
இயேசுவும் சிறை பிடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படும் முன்னர், சீடர்களிடம் ,அவர்கள் சந்திக்கவிருக்கின்ற பாடுகளைக் குறித்து எச்சரித்தார். மேலும் அவர்கள் எல்லாராலும் புறக்கணிக்கப்படுவர் எனவும் கூறினார். ‘‘அவர்கள் பிதாவையும், என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்’’ என்றார் (16:3). இயேசு அவர்களுக்கு ஆறுதலின் வார்த்தைகளையும் கொடுத்தார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்றார் (வச. 33).
இயேசுவின் சீடர்களில் அநேகர், திரு.பியே குடும்பத்தினர் அநுபவித்ததைப் போன்று பாடுகளைச் சந்தித்திருக்க மாட்டார்கள். நாமும் பாடுகளைச் சந்திக்க நேரலாம். அதற்காக நாம் தைரியம் இழக்கவோ, ஆத்திரம் அடையவோ வேண்டாம். நமக்கு உதவி செய்வதற்காக பரிசுத்த ஆவியானவரை நமக்கு அனுப்புவதாக வாக்களித்துள்ளார். நாம் வழிநடத்தப் படவும், தேற்றப்படவும், அவரை நோக்கிப் பார்ப்போம் (வச. 7). இருண்ட நேரங்களில், நாம் விழாத படி, தேவனுடைய வல்லமையுள்ள பிரசன்னம் நம்மைத் தாங்கிக் கொள்ளும்.
கிறிஸ்துவின் விசுவாசியாக என்னென்ன துன்பங்களை அநுபவித்துள்ளாய்? அந்த கடினமான நேரங்களில் உன்னுடைய நடத்தை எவ்வாறு இருந்தது?
பரலோகத் தந்தையே, துன்பங்களை அநுபவிக்கின்ற உம்முடைய
பிள்ளைகளை தயவாய் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.