ஓர் இளம் எழுத்தாளரான நான், எழுத்தாளர் மாநாடுகளில் இருக்கும் போது அடிக்கடி என்னுடைய திறமையின் மீது சந்தேகம் கொள்வதுண்டு. நான் அந்த அறையைச் சுற்றிப் பார்க்கும் போது அங்குள்ள மனிதர்கள் யாவரும் ராட்சதர்களைப் போல எனக்குக் காட்சித்தருகின்றனர். எனக்குப் போதிய பயிற்சியும் முன் அநுபவமும் இல்லாததால் இப்படித் தோன்றுகின்றது. எனக்கிருந்ததெல்லாம் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் எழுதப்பட்ட வேதாகமத்தின் நடையும், தொனியும், மொழியுமே. அதுவே என் பேச்சும், என் எழுத்தின் நடையாகவும் அமைந்தது. அதுவே என்னுடைய ஆயுதம். அதன் ஓசை எனக்குள் மகிழ்ச்சியைத் தந்தது. அது எல்லாருக்கும் அப்படியேயிருக்குமெனவும் நம்புகின்றேன்.
இளம் மேய்ப்பனான தாவீதும் கோலியாத்துடன் யுத்தம் செய்யும்படி சவுலின் போராயுதங்களை அணியும் வரை தன்னைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை (1 சாமு. 17:38-39). அந்த போராயுதங்களை அணிந்து கொண்டு அவனால் நடக்க முடியவில்லை. ஒரு மனிதனுடைய ஆயுதங்கள் மற்றொரு மனிதனுக்குச் சிறை போன்றது என்பதை தாவீது புரிந்திருப்பான். “நான் இவைகளைப்போட்டுக் கொண்டு போகக் கூடாது” (வச. 39) என்றான். அவன் அறிந்திருந்ததை நம்பினான். அந்த நேரத்தில் அவனுக்கு எது தேவையோ அதை தேவன் அவனுக்குள் தயாரித்து வைத்திருந்தார் (வச. 34-35) கவணும், கற்களும் தான் தாவீதுக்கு பழக்கமானவை. அவையே அவனுடைய ஆயுதங்கள். அவற்றை தேவன் பயன்படுத்தி இஸ்ரவேலரின் அதிபதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார். நீயும் உன்னைக் குறித்து அறியாமல் இருந்த நேரங்களுண்டா? பிறர் பெற்றுள்ள ஏதோவொன்றை நான் பெற்றிருந்தால் என்னுடைய வாழ்க்கையும் வேறு விதமாக அமைந்திருக்குமென நினைக்கின்றாயா?
தேவன் உனக்கென்று தந்துள்ள திறமைகளையும் அனுபவத்தையும் நினைத்துப்பார். அவர் உனக்குத் தந்துள்ள ஆயுதத்தை நம்பு.
பிறருடைய ஆயுதத்தை, உன்னுடையதோடு ஒப்பிட்டுப் பார்த்து பொறாமை கொண்ட அனுபவம் உண்டா? உனக்குள்ள ஆயுதம் இன்றைய தேவைக்கு எப்படி போதுமானதாக அமைந்துள்ளது?
தேவனே, சில வேளைகளில் என்னுடைய சவால்கள் ராட்சதர்களைப் போல காட்சியளிக்கும் போது நான் என்னைக் குறித்து தாழ்வாக நினைத்துள்ளேன். எனக்குத் தேவையானதை எனக்குத் தந்துள்ளீர் என்பதை நான் புரிந்து கொள்ள எனக்குதவியருளும். என் வாழ்வு முழுவதையும் நீர் வரைந்து வைத்துள்ளீர்.