ஜிம் பதட்டத்துடன், தான் வேலை செய்யும் குழுவினரோடு, தான் சந்திக்கும் பிரச்சனைகளான பிரிவினைகள், நியாயப்படுத்தும் குணம் மற்றும் புரிந்துகொள்ளாமை ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்து கொண்டான். ஒரு மணி நேரம் பொறுமையாக அவனுடைய காரியங்களைக் கேட்ட பின், நான், ‘‘இந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டுமென இயேசு விரும்புகிறாரெனக் கேட்ப்போம்” என்று ஆலோசனைக் கூறினேன் .நாங்கள் அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தோம். அப்பொழுது ஓர் ஆச்சரியமான காரியம் நிகழ்ந்தது. தேவ சமாதானம் எங்களை நிரப்பியதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம். அவருடைய பிரசன்னத்தையும் வழி நடத்துதலையும் உணர்ந்த போது ,அந்தக் கடினமான சூழலில் முன்னேறிச் செல்ல எங்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது.
இயேசுவின் சீடனான பேதுருவுக்கும் தேவனுடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் தேவைப்பட்டது. ஓர் இரவு அவனும் மற்ற சீடர்களும் கலிலேயா கடலில் பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்த போது புயல் வீச ஆரம்பித்தது. அப்பொழுது இயேசு கடல் மேல் நடந்து வந்தார். அது சீடர்களை திகைப்படையச் செய்தது .ஆனால், இயேசு அவர்களிடம், ‘‘திடன் கொள்ளுங்கள், நான் தான்,பயப்படாதிருங்கள்” என்றார் (மத். 14:27). உடனே பேதுரு இயேசுவிடம் தானும் அவரோடு நடக்க கட்டளையிடும் என்றான். அவன் படகை விட்டு நீரில் இறங்கி இயேசுவை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால், அவன் தன்னுடைய இலக்கை நோக்குவதை விட்டு விட்டு தான் இருக்கின்ற ஆபத்தையும், மனிதனின் இயலாமையையும் நினைக்க ஆரம்பித்தான், மூழ்கத் தொடங்கினான். ‘‘ஆண்டவரே என்னை ரட்சியும்’’ என்று கூப்பிட்டான். இயேசுவும் அன்போடு அவனைக் காப்பாற்றினார் (வச. 30-31).
பேதுருவைப் போன்று, நம்முடைய வாழ்க்கைப் புயலின் போதும் தேவக் குமாரனாகிய இயேசு நம்முடனேயேயிருக்கிறார் என்பதைக் கற்றுக் கொள்வோம்.
இன்று உன் வாழ்வின் எத்தகைய புயலின் வழியாகக் கடந்து செல்கின்றாய்? உன்னுடைய பார்வை புயலை விட்டு விட்டு, அதை அடக்கியவரை நோக்கிப் பார்க்கச் செய்யலாமா?
இயேசப்பா, எங்கள் வாழ்க்கை புயலை அடக்கக் கூடிய வல்லமையும் அதிகாரமும் உமக்கிருப்பதால் நன்றி கூறுகின்றேன். உம் மீது நம்பிக்கை வைக்க எனக்குதவியருளும்.