மேரி லீ என்பது 16 அடி நீளமும், 3500 பவுண்டு எடையும் கொண்ட பெரிய வெள்ளை சுறாமீன். கடல் ஆய்வாளர்களால் பரப்பி பொருத்தப்பட்டு 2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் கிழக்குச் சமுத்திரத்தில் விடப்பட்டது. அதன் மேல்பக்கத் துடுப்புடன் இணைக்கப்பட்ட பரப்பி, செயற்கைகோள் மூலம் கண்காணிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக மேரி லீ மேற்கொண்ட பயணங்கள் ஆராய்ச்சியாளர்களாலும் , கடலில் பயணிப்பவர்களாலும் நேரடியாகப் பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 40,000 மைல் தொலைவு வரையும் அதனைப் பின் தொடர்ந்தனர். ஆனால், ஒருநாள் அதனோடிருந்த தொடர்பு நின்று விட்டது. ஒருவேளை, அதன் பரப்பியிலுள்ள பாட்டரி செயலிழந்திருக்கலாம்.
மனித அறிவும் ,தொழில் நுட்பமும் இவ்வளவு தான் செயல்பட முடிந்தது. மேரி லீயைப் பின் தொடர்ந்தவர்களெல்லாரும் அதன் பாதையைக் கண்டுபிடிக்க முடியாமல் விட்டு விட்டனர். ஆனால் நீயும் நானும் நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தேவனுடைய பார்வையிலிருந்து தவிர்க்க முடியாது. தாவீது, “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்’’ (சங். 139:7-8) என்று ஜெபிக்கிறார். “இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது” என வியந்தார்.
தேவன் நம்மைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறார்.ஏனெனில் அவர் நம்மை நேசிக்கின்றார். அவர் நம் வாழ்வை கவனிப்பதோடு மட்டுமல்ல, பாதுகாத்தும் வருகின்றார். நம் வாழ்வினுள் வந்து அதைப் புதிதாக்குகின்றார். இயேசுவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதலின் மூலம் நம்மை தேவனண்டை இழுத்துக் கொள்கின்றார். நாமும் அவரை அறிந்து கொண்டு, நித்திய காலமாக அவரையே நேசிப்போம். தேவனுடைய அன்பின் எல்லையை விட்டு நம்மால் கடந்து செல்ல முடியாது.
தேவன் நம்மை அறிந்திருக்கிறார், நம் மீது அன்பு வைத்திருக்கிறார், என்ற எண்ணம் எப்படி உன்னை முற்றிலும் ஊக்கப்படுத்துகிறது? அவருடைய அன்பை பிறரிடம் எப்படி எடுத்துச் சொல்லப் போகின்றாய்?
அப்பா, நீங்கள் எப்பொழுதும் என்னை கவனித்துக் கொண்டிருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். உம்முடைய மறாத அன்பையும் , உம்முடைய பிரசன்னத்தையும் நான் உணர்ந்து கொள்ளும்படி உதவியருளும்.