இது வழுக்கலான இடம்!
அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் பனிச்சறுக்கலைக் கற்றுக் கொண்டிருந்த போது, எளிதான இறக்கங்களில் செல்லும் போது நான் என்னுடைய மகன் ஜோஷைப் பின் தொடர்ந்து செல்வேன். என்னுடைய கண்கள் அவன் மீதேயிருக்க, அவன் அந்த மலைத் தொடரில் ஒரு செங்குத்தான குன்றில் திரும்பியதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். அப்பொழுது நான் என்னுடைய கட்டுப்பாட்டை இழந்து, ஒரு பக்கம் சரிந்தவனாக குழியில் இறங்கிவிட்டேன்.
நாம் எத்தனை எளிதில் பாவமாகிய சரிவில் வழுக்கிச் சென்று விடுகிறோம் என்பதை சங்கீதம் 141 காட்டுகின்றது. அத்தகைய சரிவில் விழாதபடி நம்மை எச்சரிக்கவே ஜெபம் உதவுகின்றது. “என் இருதயத்தைத்துன்மார்க்கத்திற்கு இணங்க வொட்டாதேயும்” (வச. 4) என்ற விண்ணப்பம் கர்த்தருடைய ஜெபத்தைப் போன்றே அமைந்துள்ளது. “எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும்” (மத். 6:13). இந்த ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்க தேவன் நல்லவராயிருக்கின்றார்.
இந்த சங்கீதத்தில் மற்றுமொரு கிருபையளிக்கும் நபரைக் காண்கிறோம். அது ஓர் உண்மையான நண்பன். “நீதிமான் என்னைத் தயவாய்க் குட்டி, என்னைக் கடிந்து கொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை” (சங். 141:5).
சோதனைகள் நாம் அறியாமலே நம்மை விழத்தள்ளுகின்றன. நாம் தவறாகச் செல்கின்றோம் என்றறியாமலேயே நீண்ட தூரம் சென்று விடுகிறோம். உண்மையான நண்பன் தன் நோக்கத்தில் உறுதியாயிருப்பவன். “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” (நீதி. 27:6). கடிந்து கொள்ளலை ஏற்றுக் கொள்வதற்குக் கடினமாயிருக்கும். ஆனால் அந்தக் கடிந்து கொள்ளலை ஓர் அன்பின் செயலாகப் பார்க்கக் கூடுமானால் அது நம்மை மீண்டும் கீழ்ப்படிதலின் பாதைக்கு வழி நடத்தும் அபிஷேகம் போலிருக்கும்.
ஓர் உண்மையான நண்பன் மூலம் நாம் உண்மைக்கு நேராக வழி நடத்தப் படுவோமாக. ஜெபத்தின் மூலம் தேவனைச் சார்ந்து கொள்.
நிலைத்திருக்கும் பாரம்பரியம்.
தாமஸ் எடிசன் முதல் மின் விளக்கை எரியச் செய்தார். ஜோனாஸ் சாக் போலியோவிற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடித்தார். நாம் தேவனை ஆராதிக்கும்படி, பாடும் அநேக பாமாலைகளை ஏமி கார்மைக்கேல் எழுதினார். நீ என்ன செய்தாய்? இவ்வுலகிற்கு நீ ஏன் அனுப்பப் பட்டாய்? உன் வாழ்வை எப்படி பயனுள்ளதாக்கப் போகின்றாய்?
ஆதியாகமம் 4ம் அதிகாரம் சொல்லுகிறது: ஏவாள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று முதல் முறையாக காயீனைக் கையிலேந்தி, “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” (வச. 1) என்கின்றாள். முதல் குமாரனைப் பெற்றெடுத்த வினோதமான அநுபவத்தை வெளிப்படுத்தும் வாக்கியம், தேவனாகிய கர்த்தரின் உதவியை முற்றிலும் சார்ந்திருத்தலை விளக்குகின்றது. “கர்த்தரால்” என விளக்குகின்றாள். தொடர்ந்து ஏவாளின் வித்திலிருந்து தோன்றிய மற்றொரு குமாரன் மூலமாக தேவன் தம் ஜனத்திற்கு ஒரு விடுதலையை கொடுக்கின்றார் (யோவா. 3:16). என்ன அருமையாக இப் பாரம்பரியம் தொடர்கின்றது.
பெற்றோராயிருத்தலென்பது இவ்வுலகிற்கு ஜனங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் ஒரு பங்களிப்பு. உன்னுடைய பங்கு ஒருவேளை நீ அமர்ந்து எழுதுன்ற அல்லது பின்னல் வேலை செய்கின்ற அல்லது சித்திரம் வரைகின்ற அறையிலிருந்து வெளியாகலாம். தேவனுடன் தொடர்பற்றிருக்கின்ற ஒருவருக்கு உன் வாழ்வு ஒரு முன் மாதிரியாக அமையலாம் அல்லது உன்னுடைய முதலீடு ஒரு வேளை உன் இறப்பிற்குப்பின் நீ நினையாத வகையில் வெளிவரலாம். அது நீ விட்டுச் சென்ற வேலையாகவோ, உன்னுடைய தொழிலில் நீ செய்த காரியத்தின் புகழ்ச்சியாகவோ இருக்கலாம். எதுவாயினும் உன்னுடைய வார்த்தைகள் ஏவாள் தேவனைச் சார்ந்திருந்ததைப் போன்று அமையுமா? கர்த்தரால், அவருடைய நாம மகிமைக்காக நீ என்ன செய்யப் போகின்றாய்?
மாறாதவர்
எங்களோடு கல்லூரியில் பயின்றவர்கள் அனைவரையும் ஒன்றாகச் சந்திக்கும்படி என் மனைவி கேரியும் நானும் சமீபத்தில் கலிபோர்னியாவிலுள்ள சான்டா பார்பரா என்ற இடத்திற்குச் சென்றிருந்தோம். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த பட்டணத்தில் தான் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து நேசிக்க ஆரம்பித்தோம். எங்களுடைய வாலிபவயதில், எஙகளுடைய சிறந்த நேரங்களைச் செலவிட்ட சில இடங்களைப் பார்க்கும்படியாகத் திட்டமிட்டிருந்தோம். எங்களுக்கு மிகவும் விருப்பமானமெக்ஸிக்கன் சிற்றுண்டிச்சாலை இருந்த இடத்தை அடைந்தபோது, அவ்விடத்தில் கட்டடப்பொருட்கள் விற்கும் கடையிருப்பதைக் கண்டோம். அங்கு தொங்கிக் கொண்டிருந்த ஓர் இரும்புதகட்டில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம், அங்கிருந்த சிற்றுண்டிச்சாலை நாற்பது ஆண்டுகள் அந்தச் சமுதாயத்தினருக்குச் சேவை செய்ததை நினைவுபடுத்தியது.
ஒரு காலத்தில் வண்ண மேசைகளாலும் நிழற்குடைகளாலும் நிரம்பியிருந்த நடைபாதை இப்பொழுது வெறுமையான பாதையாயிருந்தது. நம்மைசுற்றியுள்ள அனைத்தும் முற்றிலும் மாறிவிட்டன. அத்தகைய மாற்றங்களின் மத்தியில் தேவனுடைய உண்மைமட்டும் மாறவில்லை. தாவீதும் இதனையே "மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது (சங். 103:15-17).தாவீது இச்சங்கீதத்தை, "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி" என்ற வார்த்தைகளோடு முடிக்கின்றார்.
பண்டை கால தத்துவஞானி ஹெராகிளிடஸ் என்பவர் "நீ ஒரு முறை கால் வைத்த அதே ஆற்றில் இன்னொரு முறை கால் வைக்கமுடியாது" (ஓடும் ஆற்றில் தண்ணீர் ஓடி மாறுவதால் அதே நீரில்)என்கிறார். வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால், தேவன் என்றும் மாறாதவராயும் ,தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற என்றும் நம்பிக்கைக்குரியவராயிருக்குக்கிறார். தலைமுறை தலைமுறையாக அவருடைய உண்மையும் அன்பும் மாறாமல் நிலைத்திருக்கின்றது.