பல வகையான ஜனங்கள் நிறைந்த இவ்வுலகில் வெவ்வேறு திறமைகளும், வெவ்வேறு தலைமைத்துவ பண்பும் கொண்ட அநேகரோடு தொடர்புகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் பட்டணத்திற்கு வெளியே ஒரு மேற்பார்வையாளரால் நடத்தப்படும் ஒரு செயல்திட்டம் சற்று மாறுபட்டது. எங்களுடைய வேலையைக் குறித்து கடுமையாக குற்றம்சாட்டியதோடு, ஒவ்வொரு வார இறுதியிலும் எங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இன்னும் அதிக வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினார். இந்த குறுக்கீட்டால் நான் ஊக்கமிழந்தேன். பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. சில வேளைகளில் இதனை விட்டுவிடலாமா என்று கூட சிந்திக்கலானேன்.
இதேபோன்றுதான் மோசேயும் துன்பங்கள் சூழ்ந்த இருண்ட வேளையில், பார்வோனைச் சந்திக்காமல் போய்விட எண்ணியிருப்பான். தேவன் மேலும் எட்டு பேரழிவுகளை எகிப்தியர் மீது அனுப்பிய பின், பார்வோன் மோசேயிடம் ‘என்னை விட்டு அப்பாலே பேர் நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய்” என வெடிக்கின்றான் (யாத். 10:28).
இந்த மாதிரி எச்சரிப்பு இருந்தபோதிலும் இஸ்ரவேலரை பார்வோனின் கையிலிருந்து மீட்பதற்கு தேவன் மோசேயை பயன்படுத்தினார். ‘விசுவாசத்தினாலே மோசே… ராஜாவின் கோபத்துக்கு பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்” (எபி. 11:27). தேவன், தான் விடுவிப்பேன் என வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்று தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையால் மோசே, பார்வோனை மேற்கொண்டான் (யாத். 3:17).
நம்முடைய வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் நம்மோடிருந்து, பரிசுத்த ஆவியானவர் மூலம் நம்மை வழி நடத்துவார் என்ற அவருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். ‘தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2 தீமோ. 1:7) நம்முடைய வாழ்வில் தேவன் காட்டும் வழியில் தொடர்ந்து செல்ல தேவையான தைரியத்தை பரிசுத்த ஆவியானவர் தந்து நம்மை வழிநடத்துவார்.
எத்தகையச் சூழ்நிலைகள் உன்னைச் சோர்வடையச் செய்கின்றன? அவற்றை நீ சந்திக்கும் போது, தேவனை எவ்வாறு சார்ந்து வாழ்கின்றாய்?