அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்லூரியின் முதல்வர் தன் மாணவர்களை, அன்று மாலை நடைபெறும் ‘வல்லமை இறங்கும்” நிகழ்வில் தன்னோடு கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மாணவர்கள் சம்மதம் தெரிவித்தனர். ஆயினும் ஆர்வமில்லாதவர்களாக தங்கள் அலைபேசிகளைத் தள்ளி வைத்துவிட்டு, சிற்றாலயத்தினுள் நுழைந்தனர். முதலாம் மணி வேளையில் இசையும், ஜெபமும் இணைந்த ஆராதனையில் அமைதியாக அமர்ந்திருந்தனர். அதில் கலந்துகொண்ட ஒரு மாணவன் தன்னுடைய அனுபவத்தைக் குறித்து, ‘அனைத்து பிற ஓலிகளையும் நிறுத்திவிட்ட ஓரிடத்தில் அமைதியாக இருக்கக் கிடைத்த ஓர் அற்புதமான வாய்ப்பு” எனத் தெரிவித்தார்.
சிலவேளைகளில் அதிகப்படியான ஓசைகளை தவிர்ப்பது என்பது கடினமாகக் தோன்றும். வெளியுலகிலிருந்தும் உள் உலகிலிருந்தும் வரும் ஒலி நம் காதுகளை செவிடாக்குவது போலவுள்ளது. ஆனால், நாம் நம்மைச் சுற்றியுள்ள ஓலியை நிறுத்திவிட்டால் தேவனைக் காணத் தேவையான அமைதியைப் பெறலாம். இதனையே சங்கீதக்காரனும் சங்கீதம் 46:10ல் கூறுகின்றார். 1 இராஜாக்கள் 19ல் தீர்க்கதரிசி எலியா தேவனைக் காணும்படித் தேடுகின்றார். பலத்த பெருங்காற்றில் தேவனைக் காணவில்லை, பூமி அதிர்ச்சியிலும் காணவில்லை, அக்கினியிலும் காணவில்லை (வச. 9-13). அதன் பின் தோன்றிய தேவனின் மெல்லிய சத்தத்தைக் கேட்டான்
(வச. 12).
அதிகப்படியான ஓசையை விழாக்காலங்களில் கட்டாயமாக நாம் கேட்கக்கூடும். குடும்ப நபர்கள், நண்பர்கள் ஒன்று சேரும் போது, அது உற்சாகமான உரையாடல்களும் அதிக உணவும், வேடிக்கைச் சிரிப்பும் தங்கள் அன்பினை வெளிப்படுத்தும் நேரமாக அமையும். ஆனால் நாம் அமைதியாக நம்முடைய இருதயத்தை தேவனுக்குத் திறந்தால் அந்த வேளை இன்னும் இனிமையானதாக இருக்கும். எலியாவைப் போன்ற அமைதியான நேரத்தில் நாமும் தேவனைச் சந்திக்கலாம். அமர்ந்து கவனிப்போமாகில் தேவனுடைய மெல்லிய குரலைக் கேட்கலாம்.
அமைதியான நேரம் தான் தேவனுடைய மெல்லிய குரலைக் கேட்பதற்கு ஏற்ற நேரம்.