Archives: அக்டோபர் 2018

தேவனின் எரியும் கொள்ளி

ஐந்து வயது சிறுவன் ஜாக்கிக்கு குரல் கொடுத்துக்கொண்டே, சிறிய குழந்தையைத் தூக்கிக்கொண்டு, ஓரு பணிப்பெண், தீப்பிடித்து எரிகிற வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தாள்.

ஆனால் ஜாக்கி அவள் பின்னால் வரவில்லை. வெளியே இருந்த ஒரு பார்வையாளர், தன் நண்பரின் தோள்மேல் ஏறி நின்று துரிதமாக செயல்பட்டார். மாடி ஜன்னல் வழியாக அவர் ஜாக்கியை பாதுகாப்பாக இறக்கியவுடன், மாடியின் கூரை தீப்பிடித்து கீழே விழுந்தது. “நெருப்பில் இருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டை” என்று ஜாக்கியைப் பற்றி அவன் அம்மா சூசனா குறிப்பிட்டார். அதிக பிரயாணம் செய்து பிரசங்கித்த பிரபலமான ஊழியக்காரர் ஜான் வெஸ்லிதான் (1701-1791) அந்த “கொள்ளிக்கட்டை” என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடவுளின் பண்பைக் குறித்து மிக அழகாக எடுத்துச் சொல்லும் சகரியா தீர்க்கதரிசியை மேற்கோள் காட்டியே சூசனா ஜாக்கியை அவ்வாறு கூறினார். தான் கண்ட தரிசனத்தைப் பற்றிக் கூறும் தீர்க்கதரிசி, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்கு அருகில் சாத்தான் நிற்கும் ஒரு விசாரணைக் காட்சியை விவரிக்கிறார். சாத்தான் யோசுவாவைக் குற்றம் சாட்டுகிறான். ஆனால் கர்த்தர் சாத்தானைக் கடிந்துகொண்டு, “இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா?” என்று கூறுகிறார் (வச. 2). “நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார் (வச. 4). 

பின்னர் “நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்” (வச. 7) என்று கர்த்தர் யோசுவாவுக்கு ஒரு சவாலையும் ஒரு வாய்ப்பையும் ஒரே நேரத்தில் தருகிறார். 

இயேசுவின்மீது வைக்கும் விசுவாசம் மூலமாக நாம் கடவுளிடம் பெறும் வெகுமதியை இது அழகாக எடுத்துக்காட்டுகிறது. அவர் நம்மை நெருப்பில் இருந்து எடுத்து, நம்மை சுத்தம் செய்து, நாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றும்போது, நம்மில் கிரியை செய்கிறார். நெருப்பில் இருந்து எடுக்கப்பட்ட கர்த்தரின் கொள்ளிக்கட்டைகள் என்று நம்மை நாம் கூறலாம்.  

நமது நண்பர்களுக்காக

எமிலி ப்ராண்ட் எழுதிய உதரிங் ஹைட்ஸ் (Wuthering Heights) என்ற கதையில் அடுத்தவர்களை குறை சொல்லுவதற்கு அடிக்கடி வேதாகமத்தை மேற்கோள் காட்டும், முரணாகப் பேசும் ஒரு கதாபாத்திரம் உண்டு. “வேதாமத்தைத் துருவி ஆராய்ந்து, அதன் வாக்குறுதிகளைத் தனக்கென்று எடுத்துக்கொண்டு, சாபங்களை அடுத்தவர்கள் மீது எடுத்தெறியும், சலிப்பைத்தரும், சுய நீதி கொண்ட பரிசேயன்” என்று அந்த கதாபாத்திரம் விவரிக்கப்படுகிறது.

முந்திய வாக்கியம் நமக்கு சிரிப்பை வரவழைக்கும்; நமக்குத் தெரிந்த சில மனிதர்களை ஒருவேளை நம் நினைவுக்குக் கொண்டுவரும். ஆனால் ஒருவிதத்தில் நாம் அனைவரும் இதேபோல்தானே இருக்கிறோம் -  அடுத்தவர்கள் தோல்வியை கண்டனம் செய்து நமது குறைகளுக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம் அல்லவா?

வேதாகமத்தில் குறிப்பிடப்படும் சிலர் இதற்கு நேர்மாறாக நடந்துகொண்டார்கள். மற்றவர்களை காப்பாற்ற முடியும் என்றால் தங்களுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை விட்டுக்கொடுத்து, சாபத்தைக் கூட ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை. இஸ்ரவேலரின் பாவங்கள் மன்னிக்கப்படாமல் இருப்பதற்கு பதிலாக தன் பெயரை கடவுளின் புஸ்தகத்திலிருந்து நீக்குமாறு மோசே கூறுவதைப் பார்க்கிறோம் (யாத்திராகமம் 32:32). தன் இனத்தார் கடவுளைக் கண்டுகொள்ள, கிறிஸ்துவை விட்டு தான் சபிக்கப்படுவதை விரும்புவதாக பவுல் கூறினார் (ரோமர் 9:3).

இயற்கையாகவே சுய நீதி கொண்டவர்களாகிய நமக்கு, தங்களை விட மற்றவர்களை அதிகமாக நேசித்தவர்களை வேதாகமம் எடுத்துக்காட்டுகிறது.  

ஏனென்றால் இத்தகைய அன்பு இறுதியில் இயேசுவை சுட்டிக்காட்டுகிறது. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்று இயேசு கற்பித்தார். நாம் இயேசுவைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்பாகவே, நமக்கு வாழ்வளிப்பதற்காக, சாவைத் தெரிந்துகொண்டு, இயேசு “முடிவு பரியந்தம்” நம் மேல் அன்புவைத்தார் (யோவான் 13:1).

இதேபோல் நாமும் நேசிக்கவும், நேசிக்கப்படவும், கடவுளின் குடும்பத்திற்கு அழைக்கப்படுகிறோம் (யோவான் 15:9-12). கற்பனை செய்ய முடியாத கடவுளின் அன்பை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, இந்த உலகம் அவரைக் காணும்.