Archives: அக்டோபர் 2018

இயேசுவின் வாழ்க்கை சம்பவங்கள்

சிறுமியாக இருந்தபோது, எங்கள் ஊரின் சிறிய நூலகத்துக்குச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் வளர் இளம் பருவத்தினருக்கான புத்தகங்கள் இருந்த பகுதியைப் பார்த்தபோது, அதில் இருந்த ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கமுடியும் என்று நினைத்தேன். என்னுடைய ஆர்வத்தில், நூலகத்தில் புதிய புத்தகங்கள் வாங்கிச் சேர்க்கும் வழக்கம் இருப்பதை மறந்துவிட்டேன். நான் அதிக முயற்சி செய்தாலும், மிக அதிகமான புத்தகங்கள் இருந்ததால் என்னால் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை.

அதிகமான புத்தக அலமாரிகளில், புதிய புத்தகங்கள் சேர்க்கப்படுகின்றன. யோவான் அப்போஸ்தலர் இத்தனை புத்தகங்களைப் பார்த்து ஆச்சரியப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய யோவான்; 1, 2 & 3 யோவான்; மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய புத்தகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டன.

இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியங்களை (1 யோவான் 1:1-4) அருகில் இருந்து பார்த்ததை கிறிஸ்தவர்களுக்குத் தெரிவிக்க, ஆவியானவரால் ஏவப்பட்டு, யோவான் அந்த புத்தகங்களை எழுதினார். ஆனால் இயேசுவின் ஊழியங்களின், அவர் போதனைகளின் ஒரு சிறு பகுதியே யோவானின் புத்தகங்களில் உள்ளன. இயேசு செய்த அனைத்தையும் எழுதினால் “எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று” (யோவான் 21:25) யோவான் கூறினார்.

யோவான் சொன்னது இன்றைக்கும் பொருந்தும். அநேக புத்தகங்கள் இயேசுவைப்பற்றி எழுதப்பட்டிருந்தாலும், இயேசுவின் அன்பையும், கிருபையையும் குறித்த ஒவ்வொரு சம்பவத்தையும் இந்த உலகத்தின் நூலகங்களில் அடக்கமுடியாது. மற்றவர்களோடு பகிர்வதற்கு நமது சொந்த அனுபவங்களும் உண்டு என்பதாலும், அவற்றை நாம் சதாகாலமும் பறைசாற்ற முடியும் என்பதாலும் நாம் சந்தோஷப்படலாம் (சங்கீதம் 89:1).

பாடலோடு தன்னைச் சுடும் கழுவை எதிர்கொள்ளுல்

போதைப் பொருட்கள் கடத்தலில் சிக்கிய இரண்டுபேர், மரண தண்டனை பெற்று, பத்து ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். அவர்கள் சிறையில் இருந்தபோது, இயேசுவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்பைப் பற்றி தெரிந்துகொண்டனர். கடவுள் தங்கள்மீது அன்பாய் இருக்கிறார் என்று தெரிந்தபோது, அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் தண்டனையை நிறைவேற்ற, துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு முன் அவர்கள் நிறுத்தப்பட்டபோது, அவர்கள் பரமண்டல ஜெபத்தை ஏறெடுத்து, “கிருபை, கிருபை” (Amazing Grace) என்ற பாடலைப் பாடினார்கள். கடவுள் மேல் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக, ஆவியானவரின் வல்லமை மூலம், அசாத்திய தைரியத்துடன் மரணத்தை எதிர்கொண்டனர்.  

தங்கள் இரட்சகர் இயேசுவின் உதாரணத்தை அவர்கள் பின்பற்றினார்கள். தன் மரணம் நெருங்குவதை அறிந்த இயேசு, மாலையில் சிறிது நேரம் தன் நண்பர்களோடு சேர்ந்து பாடிக்கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்திலும் அவர் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் என்ன பாடினார் என்பது அதிலும் விசேஷமான காரியம். அன்றைய இரவில், இயேசுவும் அவர் நண்பர்களும் பஸ்கா உணவை சாப்பிட்டார்கள். பொதுவாக பஸ்கா உணவு சாப்பிட்டதும், துதி என்ற பொருள்படும் ஹாலல் (Hallel) என்ற 113 முதல் 118 வரையான சங்கீதங்களைப் பாடுவார்கள். அன்று இரவு, மரணம் நெருங்கி இருப்பதை அறிந்த இயேசு, தன்னை சுற்றிக்கொண்ட “மரணக் கட்டுகள்” பற்றிப் பாடினார் (சங்கீதம் 116:3). ஆனாலும், கடவுளின் கிருபையைத் துதித்து (117:2), அவர் இரட்சிப்புக்கு நன்றி செலுத்தினார் (118:14). இந்த சங்கீதங்கள் சிலுவையில் அறையப்படும் முன், இயேசுவுக்கு அதிக ஆறுதலைத் தந்தன.  

மரணத்துக்கு ஒப்புவிக்கப்படுவதற்கு இயேசு தவறு எதுவும் செய்யவில்லை. ஆனாலும், கடவுள்மேல் அவர் வைத்திருந்த அதிக நம்பிக்கையின் காரணமாக, மரணத்தை எதிர்கொள்ளும்போதும், கடவுளின் அன்பைக் குறித்துப் பாடினார். எந்த விதமான சோதனைகளை நாம் சந்தித்தாலும், இயேசுவால், கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.  

வார்த்தைகளுக்கும் அதிகமாக

ஒரு அர்ப்பணிப்பு விழாவில், பிராந்திய ஆப்பிரிக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமத்தின் பிரதி ஒன்று அந்தப் பகுதியின் தலைவருக்கு அளிக்கப்பட்டது. அந்த மொழிபெயர்ப்பு முயற்சியை பாராட்டும் விதமாக, அந்தத் தலைவர் வேதாகமத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, “ஆண்டவர் எங்கள் மொழியை புரிந்து கொள்கிறார்! இப்போது எங்கள் தாய் மொழியிலேயே நாங்கள் வேதாகமத்தை வாசிக்கமுடியும்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

நமது மொழி எதுவாக இருந்தாலும், நம் பரம பிதா அதை புரிந்துகொள்கிறார். ஆனால் பல வேளைகளில் நமது இருதயத்தின் ஆழத்தில் உள்ள ஏக்கங்களை அவரிடம் வெளிப்படுத்த முடிவதில்லை. நாம் என்ன மன நிலையில் இருந்தாலும், ஜெபிக்கும்படி பவுல் நம்மை ஊக்குவிக்கிறார். இந்த உலகத்தின் வேதனைகள் மற்றும் நமது துன்பங்கள் பற்றி “சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது” (ரோமர் 8:22) என்கிறார். அதை பரிசுத்த ஆவியானவர் நமக்காக இடைபடுவதோடு ஒப்பிடுகிறார். “ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (வச. 26) என்று கூறுகிறார்.

கடவுளின் பரிசுத்த ஆவியானவர் நம்மை முற்றிலும் அறிவார். நமது வாஞ்சைகள், நமது இருதயத்தின் நினைவுகள், நம் மனதில் இருக்கும் வெளிப்படுத்தாத வார்த்தைகள் ஆகிய அனைத்தையும் அவர் அறிவார். நாம் கடவுளோடு பேச அவர் உதவுகிறார். குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நாம் மாறும்படி, பரிசுத்த ஆவியானவர் நம்மை ஏவுகிறார் (வச. 29).

நமது பரம பிதா நம் மொழியை புரிந்துகொள்கிறார். அவரது வார்த்தையாகிய வேதாகமம் மூலம் நம்மோடு பேசுகிறார். நாம் சிரத்தை இல்லாமலோ, சிறியதாகவோ ஜெபம் செய்யும்போது, பரிசுத்த ஆவியானவர் நம் மூலமாக பிதாவோடு பேசி, நமக்கு உதவுகிறார். ஜெபத்தின்மூலம் நாம் அவரோடு பேச அவர் வாஞ்சையாய் இருக்கிறார்.

பாடும் நம் பிதா

பாடுவது எவ்வளவு முக்கியமானது என்று எங்கள் குழந்தைகள் பிறக்கும் முன் எனக்கோ, என் மனைவிக்கோ யாரும் சொல்லவில்லை. என் பிள்ளைகளுக்கு இப்போது முறையே ஆறு, எட்டு, பத்து வயதாகிறது. ஆனால் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். ஒவ்வொரு இரவும் நானும், என் மனைவியும் மாறி மாறி அவர்களைத் தொட்டிலில் போட்டு ஆட்டி, தூங்க மாட்டார்களா என்று ஏங்குவோம். அவர்களை சீக்கிரம் தூங்க வைக்கும் எண்ணத்தில், தொட்டிலை ஆட்டுவதிலும், தாலாட்டுப் பாடுவதிலும் பல மணி நேரம் செலவழித்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு இரவும் என் குழந்தைகளுக்காக நான் பாடும்போது, ஏற்பட்ட ஒரு மாறுதல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது: அவர்கள்மீது நான் வைத்திருந்த அன்பும், சந்தோஷமும் நான் கனவிலும் நினைக்காத அளவிற்கு பல மடங்கு அதிகரித்தது. 

நம் பரம பிதா தன் பிள்ளைகளுக்காக மகிழ்ந்து பாடுவார் என்று வேதாகமம் சொல்வது உங்களுக்குத் தெரியுமா? பாட்டின்மூலம் நான் என் குழந்தைகளை அமர்த்த முயன்றதுபோல, நமது பரம தந்தை தன் மக்களுக்காகப் பாடுகிறார் என்ற வர்ணனையுடன் செப்பனியா தன் புத்தகத்தை முடிக்கிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17). 

செப்பனியா தீர்க்கதரிசியின் புத்தகத்தின் பெரும்பகுதி கடவுளை நிராகரித்தவர்களுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்த எச்சரிக்கையாகும். ஆனால் செப்பனியா தன் புத்தகத்தை நியாயத்தீர்ப்புடன் முடிக்கவில்லை. கடவுள் தன் மக்களை அவர்கள் துன்பங்களில் இருந்து மீட்பது மட்டுமல்லாமல் (வச.19-20), அவர்களை நேசிப்பதாகவும், அவர்கள்பேரில் மகிழ்ந்து பாடுவதாகவும் முடிக்கிறார் (வச. 17).

நம் ஆண்டவர் வல்லமையான இரட்சகர் மட்டுமல்லாமல் (வச.17), நமக்காக அன்பின் பாடல்களைப் பாடும் நம் நேச தகப்பனாகவும் இருக்கிறார்.