போதைப் பொருட்கள் கடத்தலில் சிக்கிய இரண்டுபேர், மரண தண்டனை பெற்று, பத்து ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். அவர்கள் சிறையில் இருந்தபோது, இயேசுவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவனின் அன்பைப் பற்றி தெரிந்துகொண்டனர். தேவன் தங்கள்மீது அன்பாய் இருக்கிறார் என்று தெரிந்தபோது, அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் தண்டனையை நிறைவேற்ற, துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு முன் அவர்கள் நிறுத்தப்பட்டபோது, அவர்கள் பரமண்டல ஜெபத்தை ஏறெடுத்து, “கிருபை, கிருபை” (Amazing Grace) என்ற பாடலைப் பாடினார்கள். தேவன் மேல் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக, ஆவியானவரின் வல்லமை மூலம், அசாத்திய தைரியத்துடன் மரணத்தை எதிர்கொண்டனர்.  

தங்கள் இரட்சகர் இயேசுவின் உதாரணத்தை அவர்கள் பின்பற்றினார்கள். தன் மரணம் நெருங்குவதை அறிந்த இயேசு, மாலையில் சிறிது நேரம் தன் நண்பர்களோடு சேர்ந்து பாடிக்கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்திலும் அவர் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் என்ன பாடினார் என்பது அதிலும் விசேஷமான காரியம். அன்றைய இரவில், இயேசுவும் அவர் நண்பர்களும் பஸ்கா உணவை சாப்பிட்டார்கள். பொதுவாக பஸ்கா உணவு சாப்பிட்டதும், துதி என்ற பொருள்படும் ஹாலல் (Hallel) என்ற 113 முதல் 118 வரையான சங்கீதங்களைப் பாடுவார்கள். அன்று இரவு, மரணம் நெருங்கி இருப்பதை அறிந்த இயேசு, தன்னை சுற்றிக்கொண்ட “மரணக் கட்டுகள்” பற்றிப் பாடினார் (சங்கீதம் 116:3). ஆனாலும், தேவனின் கிருபையைத் துதித்து (117:2), அவர் இரட்சிப்புக்கு நன்றி செலுத்தினார் (118:14). இந்த சங்கீதங்கள் சிலுவையில் அறையப்படும் முன், இயேசுவுக்கு அதிக ஆறுதலைத் தந்தன.  

மரணத்துக்கு ஒப்புவிக்கப்படுவதற்கு இயேசு தவறு எதுவும் செய்யவில்லை. ஆனாலும், தேவன் மேல் அவர் வைத்திருந்த அதிக நம்பிக்கையின் காரணமாக, மரணத்தை எதிர்கொள்ளும்போதும், பிதாவின் அன்பைக் குறித்துப் பாடினார். எந்த விதமான சோதனைகளை நாம் சந்தித்தாலும், இயேசுவால், கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.