வை--ஃபை இருக்கிறதா?
ஊழியத்திற்காக இளைஞர்களுடன் ஒரு பயணத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தபோது, “அங்கே வை—ஃபை (Wi-Fi)இருக்குமா” என்ற கேள்வியை அநேக முறை என்னிடம் கேட்டார்கள். இருக்கும் என்று அவர்களுக்கு நான் உறுதி அளித்தேன். ஒரு நாள் இரவு வை—ஃபை இணைப்பு இல்லாதபோது, அந்த இளைஞர்கள் அதிகமாகப் புலம்பினார்கள்.
நம்மில் பலர் நம் கையில் நம் ஸ்மார்ட் ஃபோன் (smart phone)இல்லாதபோது, எதையோ இழந்துவிட்டதைப் போல பரிதவிக்கிறோம். அவை நம் கையில் இருக்கும்போது, நம் கண்கள் அதன் திரையை விட்டு விலகுவதில்லை.
எல்லாவற்றையும்போல, இணையமும், அதன் மூலம் நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களும் நமது கவனத்தை திசை திருப்புவதாக இருக்கலாம் அல்லது நமக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம். இந்த இரண்டில் எது என்பது, அதிலிருந்து பெறும் தகவல்களை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நீதிமொழிகளில் “புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்” (15:14) என்று வாசிக்கிறோம்.
வேதாகம ஞான போதனைகளை நம் வாழ்க்கைக்கு நாம் பயன்படுத்தும்போது, நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள முடியும்.சமூக இணையதளங்களையும், அதன்மூலம் நாம் இணைந்திருக்கும் குழுக்களின் செய்திகளையும் தினமும் கட்டாயம் பார்க்கிறோமா? எந்த விதமான விஷயங்களில் நாம் ஆர்வம் செலுத்துகிறோம் என்பதை அது சுட்டிக் காட்டுகிறதா? நாம் இணையத்தில் படிக்கும், பார்க்கும் விஷயங்கள் விவேகமான வாழ்க்கை வாழ நம்மை ஊக்குவிக்கிறதா (வச. 16-21); அல்லது – புறங்கூறுதல், அவதூறான விஷயங்கள், உலகப்பிரகாரமான செல்வங்கள், தவறான பாலியல் சிந்தனைகள் – போன்ற மதியீனமான காரியங்களைத் தேடுகிறோமா?
பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, “உண்மையுள்ள, ஒழுக்கமுள்ள, நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள, நற்கீர்த்தியுள்ள” (பிலிப்பியர் 4:8) விஷயங்களால் நம் சிந்தனைகளை நிரப்ப முடியும். கர்த்தர் தரும் ஞானத்தால், அவரைக் கனப்படுத்தக்கூடிய நல்ல விஷயங்களை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.
நம் பெயர் அவருக்குத் தெரியும்
நியூயார்க் நகரில் உள்ள செப்டம்பர் 11 நினைவுச் சின்னத்திற்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கே இருக்கும் இரட்டை பிரதிபலிப்புக் குளங்களில் ஒன்றை ஒளிப்படம் எடுத்தேன். உலக வர்த்தக மையத் தாக்குதலில் உயிரிழந்த சுமார் 3,000 மக்களின் பெயர்கள், இந்த குளங்களைச் சுற்றி உள்ள வெண்கலத் தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பின்பு அந்தப் படங்களை கவனமாகப் பார்த்தபோது, ஒரு பெயரின்மேல் ஒரு பெண்ணின் கை இருப்பதைப் பார்த்தேன். தங்களுக்கு அருமையானவர்கள் பெயரின்மேல் கை வைத்து, நினைவுகூருவதற்காக அநேகர் அந்த இடத்திற்கு வருகிறார்கள்.
கர்த்தரை விட்டு அவரின் ஜனம் பின்வாங்கியபோதும், இயேசு கிறுஸ்துவின்மாறாத அன்பையும், அவர்கள்மீது அவர் வைத்திருக்கும் கரிசனையையும் ஏசாயா அவர்களுக்கு நினைவுபடுத்தினார். பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் (ஏசாயா 43:1) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சங்கீதம் 23ல், “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்....என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (வச. 4,6) என்று தாவீது கூறுகிறார்.
கர்த்தர் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அவருக்கு நம் பெயர் தெரியும்; அவரது மாறாத அன்பினால், நம்மை அவரது கரத்தின் பிடியில் வைத்துள்ளார்.
உறுதியாய் நிற்பது எப்படி?
பனிக்காலத்தின் கடுங்குளிர் நாள் அது. கதகதப்பான என் வாகனத்தில் இருந்து, ஒரு கதகதப்பான கட்டடத்துக்குள் எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த நிமிடம், என் முழங்கால்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டு, பாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக நகர்ந்துதரையில் விழுந்தேன். எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றாலும், அதிக வலியை உணர்ந்தேன். நேரம் ஆக ஆக வலி அதிகரித்தது. நான் முற்றிலும் குணம்பெற பல வாரங்கள் ஆனது.
இதுவரை கீழே விழுந்ததில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. யாரோ அல்லது ஏதோ ஒன்று நாம் கீழே விழாமல் பார்த்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சரீரப் பிரகாரமாக, நாம் விழாமல் இருக்க எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், நம் வாழ்க்கையில் கிறிஸ்துவை கனப்படுத்த நாம் எடுக்கும் முயற்சியில் நமக்கு உதவ தயாராகக் காத்திருப்பதோடு, நமது மறுமை வாழ்வில் அவரது பிரசன்னத்தில் சந்தோஷமாக நிற்க தயார்படுத்தவும் ஒருவர் இருக்கிறார்.
நம்மை திசைதிருப்பும், குழப்பும், சிக்கவைக்கும் பல சபலங்களை (தவறான போதனைகளையும்கூட) நாம் தினமும் எதிர்கொள்ளுகிறோம். ஆனால் இந்த உலகத்தில் நாம் நம் வழிகளில் உறுதியாக இருப்பதற்கு நம் சொந்த முயற்சிகள் மட்டும் காரணம் கிடையாது. நாம் கோபமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பங்களில் அமைதி காக்கவும், ஏமாற்றக்கூடிய சந்தர்ப்பங்களில் நேர்மையாக நடக்கவும், வெறுப்புக்குப் பதிலாக அன்பைத் தேர்ந்தெடுக்கவும், தவறுக்குப் பதிலாக உண்மையைத் தேர்ந்தெடுக்கவும் கர்த்தரின் வல்லமையே நம்மைத் தாங்குகிறது என்பது எவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது (யூதா 1:24). கிறிஸ்து மீண்டும் வரும்போது, கர்த்தரின்அங்கீகரிப்பைப் பெற்று அவர்முன் நாம் நிற்கும்போது, அவரது நிலையான கிருபைக்காக நாம் இப்போது ஏறெடுக்கும் ஸ்தோத்திரம், நித்திய காலமாக எதிரொலிக்கும் (வச. 25).
அவர்கள் கிறிஸ்துவைப்போல் வாசனை கொண்டிருந்தார்கள்
வீட்டிலிருந்து அதிக தூரத்திலிருந்த நகரத்திற்குப் பேருந்தில் வந்திருந்த பாப் இறங்கினார். கசகசப்பாக இருந்தது. நாள் முழுவதும் பிரயாணம் செய்ததில் மிகவும் களைப்பாக உணர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது நண்பர்களின் நண்பர்கள் அந்த இடத்தில் வசித்தனர். அவர்கள் அவரை வரவேற்றபோது, அவர் மரியாதையுடன் நடத்தப்படுவதை உணர்ந்ததோடு, தன் வீட்டில் இருப்பதுபோல், சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தார்.
பின்னர், பழக்கப்படாத ஒரு இடத்தில் எப்படி தன்னால் அமைதியாக உணர முடிந்தது என்று யோசிக்கும்போது, அதற்கான விடை அவருக்கு 2 கொரிந்தியரில் கிடைத்தது. கர்த்தரைப் பின்பற்றுபவர்கள் “கிறிஸ்துவுக்காக நற்கந்தமாய்” இருப்பதாக பவுல் விவரிக்கிறார். “அதேதான்” என்று பாப் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அவரை உபசரித்தவர்கள் கிறிஸ்துவைப் போல் “வாசனை கொண்டிருந்தார்கள்”.
கர்த்தர் தம் மக்களை கிறிஸ்துவில் “வெற்றி சிறக்கப்பண்ணி” அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துவதாக பவுல் கூறும்போது, பழங்கால வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். வெற்றி பெற்ற படையினர் தெருக்கள் வழியாக நடந்து செல்லும்போது, தூபவர்க்கம் கொளுத்துவார்கள். அந்த வாசனை, அந்தப் படையின் ஆதரவாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேபோல், தேவனின் மக்கள், விசுவாசிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் வாசனையை எடுத்துச் செல்வதாக, பவுல் கூறுகிறார். அது நாமாக உருவாக்குவது அல்ல. கர்த்தரைப் பற்றி நாம் எடுத்துச்சொல்லும்போது, நம்மை வழிநடத்துகையில் அவர் அதை உருவாக்குகிறார்.
பாப் எனது தந்தை. அந்த தொலைதூரப் பயணத்தை அவர் மேற்கொண்டு, நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை அவர் அதை மறக்கவில்லை. கிறிஸ்துவைப்போல் வாசனை கொண்டிருந்த மக்களைப் பற்றி அவர் இன்றும் பேசுகிறார்.