வீட்டிலிருந்து அதிக தூரத்திலிருந்த நகரத்திற்குப் பேருந்தில் வந்திருந்த பாப் இறங்கினார். கசகசப்பாக இருந்தது. நாள் முழுவதும் பிரயாணம் செய்ததில் மிகவும் களைப்பாக உணர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது நண்பர்களின் நண்பர்கள் அந்த இடத்தில் வசித்தனர். அவர்கள் அவரை வரவேற்றபோது, அவர் மரியாதையுடன் நடத்தப்படுவதை உணர்ந்ததோடு, தன் வீட்டில் இருப்பதுபோல், சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தார்.

பின்னர், பழக்கப்படாத ஒரு இடத்தில் எப்படி தன்னால் அமைதியாக உணர முடிந்தது என்று யோசிக்கும்போது, அதற்கான விடை அவருக்கு 2 கொரிந்தியரில் கிடைத்தது. கர்த்தரைப் பின்பற்றுபவர்கள் “கிறிஸ்துவுக்காக நற்கந்தமாய்” இருப்பதாக பவுல் விவரிக்கிறார். “அதேதான்” என்று பாப் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அவரை உபசரித்தவர்கள் கிறிஸ்துவைப் போல் “வாசனை கொண்டிருந்தார்கள்”.

கர்த்தர் தம் மக்களை கிறிஸ்துவில் “வெற்றி சிறக்கப்பண்ணி” அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துவதாக பவுல் கூறும்போது, பழங்கால வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். வெற்றி பெற்ற படையினர் தெருக்கள் வழியாக நடந்து செல்லும்போது, தூபவர்க்கம் கொளுத்துவார்கள். அந்த வாசனை, அந்தப் படையின் ஆதரவாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேபோல், தேவனின் மக்கள், விசுவாசிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் வாசனையை எடுத்துச் செல்வதாக, பவுல் கூறுகிறார். அது நாமாக உருவாக்குவது அல்ல. கர்த்தரைப் பற்றி நாம் எடுத்துச்சொல்லும்போது, நம்மை வழிநடத்துகையில் அவர் அதை உருவாக்குகிறார்.

பாப் எனது தந்தை. அந்த தொலைதூரப் பயணத்தை அவர் மேற்கொண்டு, நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை அவர் அதை மறக்கவில்லை. கிறிஸ்துவைப்போல் வாசனை கொண்டிருந்த மக்களைப் பற்றி அவர் இன்றும் பேசுகிறார்.