மளிகைக் கடைக்குச் செல்வது என்பது நான் மிகவும் விரும்பும் ஒரு காரியமல்ல. ஆனால், அது இவ்வுலக வாழ்வோடு இணைந்த ஒன்று, கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒன்று.
ஆனால், இந்த வேலையில் ஓர் அங்கத்தை எதிர்பார்த்துச் செல்ல நான் தூண்டப்பட்டேன். அது ப்ரெட் நிற்கும் பகுதியில் அமைந்த வெளியே போகும் வரிசை. ப்ரெட் அந்த வெளியே செல்லும் வரிசைக்கு அதை ஒரு காட்சி நேரமாக மாற்றிவிட்டார். அவர் வியத்தகுவகையில் வேகமாகச் செயல்படுவதோடு, முகத்தில் பெரிய சிரிப்பும், சில வேளைகளில் நடனமும், அதனோடு சிலவேளைகளில் பாடலையும் கொண்டிருப்பார். அத்தோடு கரணமிட்டுத் திரும்பி நினைக்க முடியாத வேகத்தில் நாம் வாங்கிய பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொடுப்பார் யாவரும் கடினமானதாகப் பார்க்கும் ஒரு வேலையை ப்ரெட் மிகவும் ஆர்வத்தோடு செய்வதைக் காணலாம். ஒரு நொடிப் பொழுதில் அவருடைய உற்சாகமான ஆவி அந்த வரிசையிலுள்ள அனைவரின் வாழ்வையும் பிரகாசிக்கச் செய்யும்.
ப்ரெட் தன்னுடைய வேலையைச் செய்யும் முறை என்னுடைய மரியாதையையும், பாராட்டையும் பெற்றது. அவருடைய மகிழ்ச்சியான நடத்தையும், சேவை செய்யும் ஆவலும், அங்கு வரிசையிலிருப்போரின் அத்தனை தேவைகளையும் நன்கு கவனித்துச் செய்வதும், அப்போஸ்தலனாகிய பவுல், நாம் எப்படி வேலை செய்ய வேண்டுமென கொலோசெயர் 3:22ல் குறிப்பிட்டிருக்கின்றாரோ அதே போலிருந்தது. “நீங்கள் மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல் தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ் செய்யுங்கள்”
நாம் இயேசுவோடு ஐக்கியமாக இருக்கும் போது, எந்த வேலையை நாம் செய்ய நேர்ந்தாலும் அது தேவனுடைய பிரசன்னத்தை நம் வாழ்வில் காட்டும் சந்தர்ப்பமாகக் கொள்ள வேண்டும். எந்த வேலையும் பெரிதென்றும், சிறிதென்றுமில்லை. அது எவ்வாறிருந்தாலும், எந்த வேலையாயினும் நம்முடைய பொறுப்புக்களை மகிழ்ச்சியோடும், புதிய வகையிலும் மிகச் சிறப்பாகவும் கையாள்வது நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களாகும்.
நம்முடைய வேலையை மிகத் திருப்திகரமாகச் செய்வதற்கு வழி, அதை தேவனுக்கென்று செய்வதேயாம்.