பகாமாஸ் பட்டணத்தில் நாசா என்ற இடத்திலுள்ள கிளிஃப்டன் ஹெரிடேஜ் நேஷனல் பார்க்-ஐ பார்த்தோமாயின் சரித்திரத்திலுள்ள ஒரு கொடூரக்காலத்தை மீண்டும் பார்த்தது போலிருக்கும். அந்த தீவின் நிலப்பகுதியும், நீர்ப்பரப்பும் சந்திக்கும் இடத்தில், கற்களாலான ஒரு படிக்கட்டு ஒரு பாறையின் உச்சிக்கு அழைத்துச் செல்லும். 18ஆம் நாற்றாண்டில் இந்த பகாமாஸ்சுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட அடிமைகள் தங்கள் குடும்பத்தை விட்டு, இந்தப் படி வழியே ஏறி ஒரு மனிதாபிமானமற்ற நடத்தைக்குள்ளாக்கப்படும் வாழ்வுக்குத் தள்ளப்படுவர். அந்த மலை உச்சியில் அந்த அடிமைகளுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. கேதுரு மரத்தால் வடிவமைக்கப்பட்ட பெண்களின் சிற்பங்கள் கடலை நோக்கிய வண்ணம், தங்களுடைய தாய்நாட்டை நோக்கிய வண்ணம், தாங்கள் விட்டு வந்த தங்கள் குடும்ப நபர்களை எதிர்பார்ப்பது போல அமைந்திருக்கும். ஒவ்வொரு சிற்பத்திலும் அந்த அடிமையின் தலைவனுடைய சாட்டையின் தழும்புகள் இருக்கும்.
இப்பெண் சிற்பங்கள் தாங்கள் இழந்து போனதை நினைத்துப் புலம்புவது போன்ற காட்சி, நாம் இவ்வுலகில் நடக்கின்ற அநீதியையும், உடைந்துபோன நிலைமையையும் நினைத்துப் பார்த்து புலம்ப வேண்டியதின் அவசியத்தை எனக்கு நினைவுபடுத்தியது. புலம்பல் என்பது நம்பிக்கையை இழந்து விட்ட நிலையை மட்டும் குறிப்பதல்ல, அது தேவனோடு நாம் உண்மையாய் இருத்தலையும் குறிக்கும். இது கிறிஸ்தவர்களுக்கு நன்கு பழகிவிட்ட ஒரு நிலை. சங்கீதங்களில் சுமார் நாற்பது சகவீதம், புலம்பலின் சங்கீதங்களாகும். புலம்பல் புத்தகத்தில் தங்களுடைய பட்டணம் பிற படையெடுப்பாளர்களால் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டதை நினைத்து புலம்புவதாகும் (3:55).
புலம்பல் என்பது வேதனையின் உண்மையான வெளிப்பாட்டை முறையாகத் தெரிவிப்பதாகும். அது தன் வேதனை, மற்றும் கஷ்டத்தின் மத்தியில் தேவனை இணைத்துக் கொள்ளும். மொத்தத்தில் புலம்பல் நம்பிக்கையைத் தரும். அநியாயத்திற்காக புலம்பும் போது, நாம் நம்மையும் பிறரையும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர செயல்படுமாறு அழைப்பதாகும்.
இதனாலேயே நாசாவிலுள்ள இந்த சிற்பத் தோட்டத்தை “ஆதியாகமம்” எனப் பெயரிட்டுள்ளனர். புலம்பலின் இடம் ஒரு புதிய துவக்கத்தின் இடமாக உணரப்படுகிறது.
நம்முடைய புலம்பலின் காலங்களில் தேவன் புதியதொன்றைக் கொண்டு வருவார் என நம்புவோம்.