அப்போஸ்தலனாகிய யோவான் அவனுடைய நண்பன் காயுவுக்கு முதலாம் நூற்றாண்டில் செய்தது, இப்பொழுது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மரித்துக் கொண்டிருக்கின்ற ஒரு செயலாகும். யோவான் அவனுக்கு கடிதம் எழுதுகின்றார்.
நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான கேத்தரின் பீல்ட் என்பவர், “கடிதம் எழுதுவது பழைய கால கலைகளில் ஒன்றாகிவிட்டது. கடிதங்களைப் பற்றி எண்ணும் போது, தர்ஷீசு பட்டணத்தானாகிய பவுல் நம் மனதில் வருகின்றார்” என எடுத்துக்காட்டாகக் கூறினார். அவரோடு நாம் அப்போஸ்தலனாகிய யோவானையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அப்போஸ்தலனாகிய யோவான் காயுவுக்கு எழுதிய கடிதத்தில் “உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’ என நம்பிக்கையைக் கொடுக்கின்றார். காயுவின் உண்மையைக் குறித்து ஊக்கம் தரும் வார்த்தைகளையும் சபையின் மீது அவன் வைத்திருக்கின்ற அன்பையும் குறித்து எழுதுகின்றார். சபையிலுள்ள ஒரு பிரச்சனையைக் குறித்தும் யோவான் குறிப்பிடுகின்றார். ஆனால், அதனைப்பற்றி பின்னர் தனித்தனியாக எழுதுவதாக வாக்களித்துள்ளார். தேவ நாம மகிமைக்காக நல்லவற்றைச் செய்வதின் கனத்தையும் பற்றி எழுதுகின்றார் எல்லாவற்றிற்கும் மேலாக இது தன் நண்பனை ஊக்கப்படுத்தும்படி சவாலாக எழுதப்பட்ட ஒரு கடிதம்.
மின்னணு தொடர்பு சாதனம் வந்த பின்பு கடிதம் எழுதும் பண்பாடு மறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், இது நாம் பிறரை ஊக்கப்படுத்துவதிலிருந்து நம்மைத் தடுத்துவிடக்கூடாது. பவுல் ஊக்கமளிக்கும் கடிதங்களை தோல் சுருள்களில் எழுதினார். நாமும் பிறரை வேறுபல வகைகளில் ஊக்கப்படுத்தலாம். இதன் உள்ளான கருத்து, நாம் எவ்வகையில் பிறரை ஊக்கப்படுத்துகிறோம் என்பதல்ல, ஆனால், பிறரை ஊக்கப்படுத்தும்படி ஒரு சிறிய நேரத்தைக் கொடுத்து, இயேசுவின் நாமத்தினால் அவர்கள் மீது நாம் அக்கறை கொள்கிறோம் என்பதைத் தைரியப்படுத்துவதாகும்.
யோவானின் கடிதத்தைத் திறந்த காயு அநுபவித்த ஊக்கத்தை நினைத்துப் பாருங்கள். நாமும் ஊக்கத்தை கொடுக்கும்படி ஒரு தொலைபேசித் தொடர்பு மூலமாகவோ அல்லது சிந்திக்கச் செய்யும் ஓர் எழுத்தின் மூலமாகவோ தேவனுடைய அன்பை நம்முடைய நண்பர்கள் மீது பிரகாசிக்கச் செய்வோமா?
ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மனிதனின் ஆவியில் ஒரு நம்பிக்கையைக் கொண்டு வரும்.