இடியோடு கூடிய மழையென்றால் எனக்கு மிகவும் விருப்பம். மிகப் பெரிய புயல், இடி முழக்கத்தோடு தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் போதெல்லாம், சிறுமியாக இருந்த நான், எனது உடன் பிறப்புகளுடன், எங்கள் வீட்டின் வெளியே அங்கும் இங்குமாக ஓடி, வழுக்கி விழுந்து, சறுக்கி விளையாடி மகிழ்வேன். நாங்கள் வீட்டிற்குத் திரும்பும் போது எங்கள் எலும்புவரை நனைந்ததைப் போன்றிருப்போம்.

அந்த சில நிமிடங்கள் நாங்கள் மிகவும் உற்சாகமாகவும், மிகவும் வலிமையான ஒன்றினுள் மூழ்கியிருப்பதைப் போன்றும் உணர்வோம். அது ஒரு விளையாட்டா அல்லது பயங்கரமானதாவென நாங்கள் அறியோம்.

சங்கீதம் 107ல் கூறப்பட்டுள்ளபடி கர்த்தர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை “நீரூற்றுகளாகவும்” மாற்றுவார் (வச. 35) என்பதை வாசிக்கும் போது என்னுடைய இளமைப்பருவ இந்நிகழ்வு என் மனதிற்கு வந்தது. இவ்வாறு ஒரு பாலைவனத்தைச், சோலைவனமாக ஒரு மழை மாற்றியதெனில், அது ஒரு சாதாரண மழையல்ல, கொட்டித் தீர்த்த பெரு மழை, வறண்ட நிலத்தின் ஒவ்வொரு வெடிப்பின் வழியேயும் சென்று, அந்நிலத்திற்கு ஒரு புதிய வாழ்வு கொடுத்த மழை.

நாமும் இத்தகைய புதுப்பித்தலுக்காகத் தான் ஏங்கிக் கொண்டிருக்கிறோமல்லவா? நம்முடைய வாழ்வும் பசியோடும், தாகத்தோடும் ஆத்துமா தொய்ந்ததாகவும் வனாந்திரத்திலே அவாந்தரவழியாய் அலைந்து திரிந்தும் தாபரிக்கும் ஊரைக் காணமலிருப்பதைப் போன்றிருக்கின்றதோ? (வச. 4-5). நமக்கு நம்பிக்கைக்கும் மேலான ஒன்று தேவை. நம்மில் வேரூன்றிவிட்ட பாவம் நம்மை அந்தகாரத்திலும் மரண இருளிலும் அழித்திவிட்டதோ? (வச. 10-11). நம்முடைய இருதயத்தில் ஒரு மாற்றம் தேவை.

இத்தகைய மாற்றத்தை நம்முடைய தேவனாலேயே தர முடியும் (வச. 20). நம்முடைய கட்டுகளின் சங்கிலிகளை உடைக்க வல்லவரிடம் நம்முடைய பயங்களையும், அவமானங்களையும் கொண்டு வருவோம். அவர் நம் இருளை அகற்றி ஒளிமயமாக்குவார் (வச. 13-14).