என்னுடைய கல்லூரி விடுதியில், ஒருநாள் காலை எழுந்தபோது, என்னுடைய அறைத் தோழி கேரல் பயத்தால் பீதியடைந்து உட்கார்ந்திருந்ததைக் கண்டேன். அவளுடைய முத்திரை மோதிரம் தொலைந்துவிட்டது. நாங்கள் எல்லாவிடத்திலும் தேடினோம், அடுத்த நாள் காலையில் நாங்கள் குப்பைக் கூடையினுள் தேடினோம். நான் வேகமாகக் குப்பைப் பையைத் திறந்தேன். “நீ இதைத் தேடுவதில் மிகவும் அர்ப்பணத்தோடிருக்கின்றாய்” என்றாள். “இருநூறு டாலர் மோதிரத்தை நான் இழக்கப் போவதில்லை” என்று உறுதியாயிருந்தாள்.
கேரலின் உறுதியான எண்ணம் இயேசு கூறிய ஓர் உவமையை எனக்கு நினைவுபடுத்தியது. “பரலோக இராஜ்ஜியம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொள்கிறான்” (மத். 13:44) என்றார். சில பொருட்கள் அதிக முயற்சியெடுத்துத் தேடக் கூடிய மதிப்பைப் பெற்றுள்ளது.
தேவனைத் தேடுகின்றவர்கள் கண்டடைவார்கள் என்று தேவன் வேதாகமத்தில் பல இடங்களில் வாக்களித்துள்ளார். உபாகமத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பி, முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் தேவனைத் தேடும் போது அவரைக் கண்டடைவார்கள் என கூறப்பட்டுள்ளது (4:28-29). 2 நாளாகமத்தில் ஆசா இராஜாவும் இதே வாக்குத்தத்தத்தால் ஊக்குவிக்கப்படுகின்றார் (15:2) எரேமியா புத்தகத்தில் சிறையிருப்பிலிருக்கின்ற இஸ்ரவேலரிடம் தேவன் இந்த வாக்குத்தத்தத்தையே எடுத்துரைக்கின்றார். தேவன் அவர்களைச் சிறையிருப்பிலிருந்து மீட்பாரென உரைக்கின்றார் (29:13-14).
நாம் தேவனை நம் அனுதின வாழ்வில் அவருடைய வார்த்தையின் மூலமாயும், அவரை ஆராதிப்பதாலும் அவரைக் கண்டுகொள்ள முடியும். நாளடைவில் அவரை நன்கு ஆழமாகத் தெரிந்துகொள்வோம். அதுவே, கேரல் தன்னுடைய மோதிரத்தை அந்த குப்பைப் பையிலிருந்து எடுத்த போதிருந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இனிமையான அனுபவமாகும்.
தேவனைக் கண்டுகொள்ள, நாம் அவரைத் தேட மனதுள்ளவர்களாயிருக்க வேண்டும்.