“நான் இந்த குழப்பத்தினுள் வந்து விட்டேன். எனவே நான் இதைவிட்டு வெளியேறிவிடுகிறேன்” என நான் சில வேளைகளில் எண்ணுவதுண்டு. நான் கிருபையின் தேவன் மீது நம்பிக்கையாயிருந்தும், எனக்குத்தகுதியிருக்கும் போது மட்டுமே தேவனுடைய உதவி எனக்குக் கிட்டும் என சில வேளைகளில் நான் நினைக்கும்படி தூண்டப்படுகிறேன்.

தேவன் முதலாவதாக யாக்கோபைச் சந்தித்தவிதம் இதற்கு ஓர் அழகான எடுத்துக்காட்டு, இந்த எண்ணத்தை உண்மையற்றதாக்குகிறது.

யாக்கோபு தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தன் வாழ்வை மாற்றுவதற்கு முயற்சிப்பதில் செலவிடுகின்றான். அவன் இரண்டாவது மகனாகப் பிறக்கின்றான். ஆனால், அந்த நாட்களில் தந்தையின் ஆசீர்வாதம் மூத்தவனுக்குத்தான் சேரும். மூத்தவன் தான்’ செழிப்பான வாழ்வைப் பெறுவான் என நம்பப்பட்டது.

எனவே யாக்கோபு தன்னுடைய தந்தையின் ஆசீர்வாதத்தை எப்படியாகிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துச் செயல்படுகின்றான். ஏமாற்றுவதன் மூலம் அதில் வெற்றியும் பெறுகின்றான். தன்னுடைய சகோதரனுக்குள்ள ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கின்றான் (ஆதி. 27:19-29).

ஆனால், அதன் விளைவாக குடும்பம் பிரிக்கப்படுகிறது. யாக்கோபு கோபத்திலிருக்கும் தன்னுடைய சகோதரனிடமிருந்து தப்பி ஓடுகிறான் (வச. 41-43). இரவு வந்த போது (28:11) யாக்கோபு ஓர் ஆசீர்வாதமான வாழ்க்கையிலிருந்து தான் எத்தனை தூரத்திலிருக்கின்றான் என்பதை உணர்ந்திருப்பான்.

அங்கு தான் யாக்கோபு தான் செய்து வந்த எத்தனங்களையெல்லாம் தள்ளிவிட்டு தேவனைச் சந்திக்கின்றான். தேவன் அவனை ஆசீர்வதிக்க வேண்டுமாயின் தீவிரமான திட்டங்கள் தேவையில்லை என்பதை அவனுக்குத் காண்பிக்கின்றார். அவன் உலகப்பிரகாரமான செல்வங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தேவனிடம் வந்துள்ளான். உலக செல்வங்களையெல்லாம் விட மேலான ஒரு நோக்கத்தை கண்டு கொண்டு (வச. 14) அவனை விட்டு என்றும் நீங்காத தேவனைப் பற்றிக் கொண்டான் (வச. 15).

இது யாக்கோபு தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கற்றுக்கொண்ட பாடம்.

இது நமக்கும் தான். நாம் எத்தனையோ மன வருத்தங்களைச் சுமந்து கொண்டிருக்கலாம். தேவன் நம்மை விட்டு தூர இருப்பதாக நினைக்கலாம். ஆனால், அவர் நம் அருகிலேயே இருக்கின்றார். அவர் நம்மை அருமையாக வழிநடத்தி, நம் குழப்பங்களிலிருந்து வெளியேற்றி அவருடைய ஆசீர்வாதத்திற்குள் கொண்டு வருகின்றார்.