ஒரு பத்திரிக்கை ஆசிரியர் வேலையிலிருந்து நான் நிறுத்தப்பட்ட பின்பு, தேவனை நோக்கி ஒரு புதிய வேலை கிடைக்க உதவுமாறு ஜெபித்தேன். வாரங்கள் சென்றன. ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வலைதளங்களில் தேடுவதிலும், விண்ணப்பப்படிவங்களை நிரப்புவதிலும் சலிப்படைந்து, “எனக்கொரு வேலைமிக முக்கியமானது என்பது உமக்குத் தெரியாதா?” என தேவனைக் கேட்டேன். என் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதால் தேவனுக்கு நேராக நீட்டப்பட்ட என்கரங்களை மடக்கி கொண்டேன்.
நான் என்னுடைய தந்தையோடு பேசிக்கொள்ளும் போதெல்லாம், அவர் அடிக்கடி தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீது நம்பிக்கையோடிருக்கச் சொல்வார். என்னுடைய வேலையைக் குறித்து அவர், “தேவன் என்ன சொல்கின்றாரோ அதன் மீது நம்பிக்கையோடிருக்கும்படி நான் உன்னிடம் எதிர்பார்க்கின்றேன்” என்றார்.
என்னுடைய தந்தையின் ஆலோசனை எனக்கு நீதிமொழிகள் 3ஆம் அதிகாரத்தை நினைவுபடுத்தியது. அது ஒரு தந்தை தன் அன்பு மகனுக்கு கொடுக்கும் ஞானமுள்ள ஆலோசனைகள். இந்தப் பகுதி என்னுடைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாயிருக்கின்றது. “உன் சுய புத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைக் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:5-6) உன்பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் என்பது தேவன் நாம் வளரும்படி நம்மை அவருடைய சித்தத்திற்கு நேராக வழிநடத்துவார் என்பதும், அவருடைய முழுமையான இலக்கு எதுவெனின் நான் அவரைப் போல மாற வேண்டும் என்பதுவுமே.
அப்படியானால் அவர் தேர்ந்தெடுக்கும் பாதைகள் வெகு இலகுவானவை என்பதல்ல. ஆனால், அவருடைய வழிநடத்துதலும், அவருடைய நேரமும் எனக்கு முற்றிலும் நன்மையாகவே இருக்கும் என நான் அவரையே நம்பியிருக்கத் தேர்ந்துகொண்டேன்.
நீயும், தேவன் உனக்கு பதிலளிக்க வேண்டுமென காத்திருக்கின்றாயா? தேவனையே நம்பி அவர் உன்னை வழி நடத்துவார் என்ற உறுதியோடு அவரோடு நெருங்கி செல்ல தேர்ந்து கொள்.
பரலோகத்திலிருக்கும் உன் தந்தைக்கு உனக்கு எது சிறந்ததென்பது தெரியும்.