பல ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வில் கலந்து கொண்டேன். வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைவது அழகானது தான், ஆனால், இந்த வைபவத்தில் கிறிஸ்தவ பாரம்பரியம், அநேக தெய்வங்களை வணங்கும் நம்பிக்கையுடைய சடங்காச்சாரங்களோடு கலந்ததைக் கண்டேன்.
தீர்க்கதரிசி செப்பனியா, உண்மையான தேவன் மீதுள்ள நம்பிக்கை, மற்ற மதங்களோடு கலப்பதைக் கண்டிக்கின்றார். யூத ஜனங்கள் உண்மையான தேவனை ஆராதிப்பவர்கள், ஆனால், மல்காமின் என்ற பிற தெய்வத்தையும் சார்ந்து வாழ்ந்தனர் (செப்பனியா 1:5) செப்பனியா அவர்கள் கைக்கொள்ளுகின்ற, தேவன் இல்லை என்கின்ற கலாச்சாரத்தையும் (வச. 6,12) கண்டிக்கின்றார். அதன் விளைவாக தேவன் யூத ஜனங்களை அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்திவிட்டார்.
ஆனாலும், தேவன் தன் ஜனங்கள் மீது செலுத்தும் அன்பினை விட்டுவிடவில்லை. அவருடைய எண்ணமெல்லாம், அந்த ஜனங்கள் தன்னிடம் திரும்ப வேண்டும் என்பதே. எனவே “தாழ்மையைத் தேடுங்கள்” (2:3) என்கின்றார். அப்பொழுது தேவன் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைப் பேசி, மீண்டும் அவர்களைச் சேர்த்துக் கொள்வதாகக் கூறுகின்றார். “அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக் கொள்வேன். உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்புவேன்” (3:20) என்கின்றார்.
நான் சென்றிருந்த திருமணத்தில் நடந்த சமய இணைப்பை கண்டிப்பது எளிது. ஆனால், உண்மையில் நாம் அனைவரும் தேவனுடைய உண்மையை நம்முடைய கலாச்சார ஊகங்களோடு எளிதாக இணைத்து விடுகின்றோம். தேவனுடைய உண்மையான வார்த்தைகளுக்கு எதிரான நம்பிக்கைகளை நாம் சோதித்து அறியும்படி பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் நமக்குத் தேவை. பரிசுத்த ஆவியானவரின் உதவியால் தான் நாம் உண்மையினை உறுதியாகவும், உண்மையோடும் தொழுதுகொள்ளும் போது தேவன் நம்மை அன்போடு அரவணைத்துக் கொள்வார் (யோவா. 4:23-24).
தேவன் நம்மை மன்னித்து மீண்டும் சேர்த்துக் கொள்ள ஆயத்தமாயிருக்கின்றார்.