கடலலையின் ஓசையை ரசித்தவாறே நானும் என்னுடைய சிநேகிதியும் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தோம். தூரத்தில் சூரியன் மறைவதையும், அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சுருண்டு மெதுவாக எங்களின் நீட்டிய பாதங்களைத் தொடாமல் சற்று தள்ளி நின்றதையும் பார்த்து மகிழ்ந்தோம். “நான் கடலையை நேசிக்கின்றேன்” என்று புன்சிரிப்போடு கூறினாள். “அது அசைந்து கொண்டேயிருப்பதால் நாம் அசையத் தேவையில்லை” என்றாள்.
என்ன சிந்தனை! நம்மில் அநேகர் நிறுத்துவதற்குக் கஷ்டப்படுகின்றோம். நாம் முயற்சிக்கின்றோம். செல்கின்றோம். நம் முயற்சிகளிலிருந்து தளர்ந்துவிடாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். நம் முயற்சிகளை விட்டு விட்டால் நாம் வாழமுடியாது என்று எண்ணிவிடுகின்றோம். சற்று நின்று கவனிப்போமாகில் நாம் எப்பொழுதும் தூரத்திலேயே வைத்துவிட நினைத்திருக்கும் சில உண்மைகளைக் கண்டு கொள்வோம்.
சங்கீதம் 46:8-9 தேவனுடைய சர்வ வல்லமையையும், அவருடைய வல்லமை வெளிப்படுவதையும் விளக்குகின்றது. “கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். …அவர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார். வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார், இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” குழப்பங்கள் நிறைந்த நம்முடைய நாட்களில் அமைதியைக் கொண்டு வர அவர் ஓயாமல் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.
10 ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறோம், “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்.”
நாம் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருந்தாலும் தேவனைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், சங்கீதக்காரன் வேறோரு முறையில் தேவனை அறிந்துகொள்ள அழைக்கின்றார். நம்முடைய முயற்சிகளையெல்லாம் விட்டு விட்டு, தேவனை அறிந்துகொள்ள அழைக்கின்றார். நாம் நின்று அமர்ந்திருந்து தேவனை அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தேவன் நின்று விடவில்லை, நமக்கு நிலையான, மாறாத பாதுகாவலையும், சமாதானத்தையும் தருகின்ற தேவனுடைய வல்லமையை வந்து பாருங்கள் என்கின்றார்.
தேவனுடைய அன்பின் கரங்களுக்குள்ளும், அவருடைய பூரண சித்தத்திற்குள்ளும் நாம் இருக்கும்போது, நாம் நன்கு இளைப்பாறுவோம்.