உடன்பணியாளர் ஒருவர் தன் சரீரத்தில் பயங்கர வலியினால் கஷ்டப்படுகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், அலுவலகத்தில் உள்ள அனைவரும் கலங்கினர். மருத்துவமனைக்கு சென்று ஒருநாள் ஓய்வெடுத்து வேலைக்கு திரும்பினதும், அவர் தன் வலிக்கான காரணம், சீறுநீரகக் கல் என்றார். அந்த கல்லை ஞாபகார்த்தமாய் மருத்துவரிடம் பெற்றவர் என்னிடமும் காட்டினார். அதைக் கண்ட நான் அவருக்காக பரிதபித்தேன், அநேக ஆண்டுகளுக்கு முன் பித்தப்பை கல்லினால் நான் பட்ட கஷ்டம் என் நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே கொடுமையான வலி அது.

இவ்வளவு சிறிய ஒரு பொருள் சரீரமுழுவதிலும் ஒரு மோசமான வேதனையை கொடுக்கமுடியும் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? ஆனாலும், ஒருவிதத்தில் 1 கொரிந்தியர் 12:26-ல் அப்போஸ்தலனாகிய பவுல் இதனையே குறிப்பிடுகிறார்: “ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்…”. பன்னிரெண்டாம் அதிகாரம் முழுவதும் பவுல் சரீரத்தை உருவகப்படுத்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் நிலையை விளக்குகிறார். “தேவனே சரீரத்தின் அவயவங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து அமைத்துள்ளார்” என்று சொல்லுகையில் அவர் கிறிஸ்துவின் சரீரத்தை குறிப்பிடுகிறார் – அனைத்து கிறிஸ்தவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான வரங்களும் பொறுப்புகளும் உண்டு. ஆனாலும், நாமெல்லாரும் ஒரே சரீரத்தைச் சேர்ந்த அவயங்களாக காணப்படுவதால், ஒருவர் பாடுபடும்போது, எல்லோரும் பாடுபடுகிறோம். நம்முடைய கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி உபத்திரவம், துக்கம் மற்றும் போராட்டங்களை சந்திக்கும்போது, நாமும் அந்த வேதனையை அனுபவிப்பதால் நாமும் பாடுபடுகிறோம்.

என் சகபணியாளரின் வலி தன் சரீரம் சுகமடைவதற்கு தேவையான உதவியை பெற அவரைத் துரத்திற்று. கிறிஸ்துவின் சரீரத்திலும், ஒருவருடைய வலி நம்முடைய மனதை உருக்கி பாதிக்கப்பட்டவருக்கு எதையாவது செய்யவேண்டும் என்கின்ற மனதுருக்கத்தை நமக்குள் மூட்டிவிடுகிறது. நாம் ஜெபிக்கலாம், உற்சாகமூட்டக்கூடிய வசனத்தை சொல்லலாம் அல்லது குணப்படுத்தும் வழிமுறையில் உதவக்கூடிய எதையாகிலும் செய்யலாம். அப்படித்தான் சரீரத்தின் அவயவங்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படும்.