என் கல்லூரி படிப்பை முடித்தபின்பு, வீட்டிற்கு தேவைப்படும் மளிகைப்பொருட்களை வாங்குவதில் நான் சிக்கனமாய் இருக்கவேண்டியிருந்தது. வாரம் ஒன்றிற்கு 25 டாலர்களுக்குமேல் செலவிடக்கூடாது என்று தீர்மானித்தேன். ஒருமுறை கடை ஒன்றில் தேவையான பொருட்களை வாங்கி அதற்கான பணம்செலுத்தும் வரிசை வந்ததும், என்னிடமிருந்த தொகையிலும் அதிகமான பொருட்களை எடுத்துக்கொண்டேனோ என்று சந்தேகப்பட்டு, காசாளாரிடம் “எடுத்த பொருட்களின் விலை இருபது டாலரை தொட்டதும் நிறுத்திக்கொள்ளுங்கள் என்றேன். ஒரு மிளகுப் பையை தவிர நான் தெரிவுசெய்த எல்லா பொருட்களையும் வாங்கமுடிந்தது.
பொருட்களை எடுத்து புறப்படுகிற வேளையில் ஒரு மனிதன் என் வாகனத்தை நிறுத்தி, “மேடம், இந்தாங்க உங்க மிளகுப் பை” என்று சொல்லி என் கையில் ஒரு பையை நீட்டினான். அதை வாங்கி அவனுக்கு என் நன்றியை தெரிவிக்கும்முன், அவன் அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டான்.
ஒரு சின்ன உதவியாக இருந்தாலும், கரிசனை மிகுந்த இச்செயலின் நன்மையை நினைத்து பார்க்கையில் என் உள்ளம் பூரிக்கின்றது, மத்தேயு 6-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்துகிறது. தேவையில் உள்ளோருக்கு உதவி செய்து அதனை விளம்பரப்படுத்துவதை இயேசு கடுமையாக விமர்சித்தார் (வச. 1). தம் சீடர்களுக்கோ இயேசு ஒரு வித்தியாசமான வழியை கற்பித்தார். தருமகாரியத்தில் தங்களையும், தங்களுடைய உதாரத்துவத்தையும் மேன்மைப்படுத்தாமல், நாம் கொடுப்பது இரகசியமாய் இருக்கவேண்டும். அதாவது, வலதுகை கொடுப்பதை இடதுகை அறியக்கூடாத அளவுக்கு நம்முடைய தர்மகாரியம் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார் (வச. 3)!
அறிமுகமில்லாத ஒருவரின் கனிவுச்செயல், கொடுத்தல் என்பது எப்போதும் நம்மைப் பற்றியதாய் இருக்கலாகாது என்பதனை எனக்கு அது நினைவுபடுத்திற்று. நம்முடைய தேவன் நமக்கு உதாரத்துவமாய் கொடுத்ததினாலேயே நாம் பிறருக்கு கொடுக்கிறோம் ( 2 கொரி. 9:6-11). ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாக உதாரத்துவமாக நாம் கொடுக்கும்போது, அவரை நமக்குள் பிரதிபலிக்கிறோம் – தேவனும் தமக்கே உரியதான ஸ்தோத்திரங்களை ஏற்றுக்கொள்கிறார் (வச. 11).
அமைதலோடும் உதாரத்துவத்தோடும் கொடுப்பது தேவனின் தயாளத்தை பிரதிபலித்திடும்.