பரிசுத்த வாரத்தில், இயேசு கிறிஸ்து சிலுவையிலே அறையப்படுவதற்கு முன்னான நாட்களை நினைவு கூருவோம். எருசலேமின் வீதிகள் வழியே இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்ற பாதையை துயரத்தின் பாதை என அழைக்கின்றனர்.
எபிரெயர் நிருபத்தை எழுதியவர் இயேசு சென்ற பாதையை துயரத்தின் பாதையையும் விட மேலாகக் கருதுகின்றார். இயேசு துயரத்தின் பாதை வழியே கொல்கொதாவை நோக்கிச் செல்வதை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டதினால், நாம் தேவனுடைய பிரசன்னத்தை நோக்கிச் செல்ல ஒரு ‘‘புதிய வாழும் வழி”யைத் திறந்துள்ளார் (எபி. 10:20).
பல நூற்றாண்டுகளாக யூத ஜனங்கள் தேவனுடைய பிரசன்னத்திற்குள் வருவதற்கு மிருகங்களை பலியிடுவதன் மூலம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டனர். ஆனால் இந்த சட்டங்களெல்லாம் வரப் போகிற நன்மையான காரியங்களின் ஒரு நிழலாகவேயிருந்தது. ஏனெனில் ஒரு காளை அல்லது வெள்ளாட்டுக்கடா, இவைகளின் ரத்தம் நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய முடியாது (வச. 1,4).
இயேசு மேற்கொண்ட துயரத்தின் வழியேயான பாதை, அவருடைய மரணத்திற்குப் பின்பு உயிர்த்தெழுதலுக்கும் வழி வகுத்தது. அவரை விசுவாசிக்கும் போது அவராலேயே நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று, அவருடைய தியாகத்தினாலேயே பரிசுத்தமாக்கப்படுகிறோம். அவருடைய நியாயப் பிரமாணங்களையும் கட்டளைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க முடியாமற் போனாலும், தேவனுடைய பிரசன்னத்தண்டை பயமில்லாமலும், தைரியமாகவும் வரும்படி நாம் அன்போடு அழைக்கப்படுகின்றோம் (வச. 10,22).
கிறிஸ்துவினுடைய துயரத்தின் பாதை, தேவனிடம் செல்ல நமக்கு ஒரு புதிய வாழும் வழியைத் திறந்துள்ளது.
கிறிஸ்துவின் தியாகம் என்பது தேவன் விரும்பியது, அதுவே நம் பாவ நிவிர்த்திக்கு தேவையானது.