என்னுடைய படிக்கும் அறையின் தரையிலிருந்த, என் தந்தையினுடைய குதிரை சவாரிக்குப் பயன்படுத்தப்படும் உயரமான தூசிபடிந்த பூட்ஸ்சுகள் அவர் எப்படிப்பட்டவர் என்பதை என் நினைவில் கொண்டு வந்தன.
பிற வேலைகளோடு, அவர் குதிரை வளர்ப்பதையும், குதிரைப்பந்தயத்தில் மிக வேகமாக ஓடுவதற்கும் அவற்றைப் பயிற்றுவிப்பதையும் செய்துவந்தார். அவர் வேலை செய்வதைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். அவர் அவைகளோடு சேர்ந்து ஓடுவதை நான் பார்த்து பிரமித்ததுண்டு.
நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தையைப் போலிருக்க வேண்டுமென விரும்பினேன். இப்பொழுது எனக்கு 80 வயதுக்குமேலாகிறது. இப்பொழுதும் அவருடைய அந்த பூட்ஸ்சுகள் எனக்குப் பெரியனவாகவேயுள்ளது.
என் தந்தை இப்பொழுது மோட்சத்தில் இருக்கின்றார். ஆனால், நான் பின்பற்ற வேண்டிய மற்றுமொரு தந்தையிருக்கிறார். நான் அவரைப் போல நன்மை செய்பவனாகவும், அவரின் அன்பின் நறுமணத்தை பரப்புபவனாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். இவ்வுலக வாழ்வில் நான் அவரைப் போல இல்லை; இருக்கவும் முடியாது. அவருடைய பூட்ஸ்சுகள் எனக்கு எப்பொழுதுமே பெரியவையாகவே உள்ளன.
ஆனால், அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு சொல்லுகின்றார், “கிறிஸ்து இயேசுவுக்குள் தம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற தேவன் தாமே… உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக” (1 பேது. 5:10). இதைச் செய்யக் கூடிய ஞானமும், வல்லமையும் அவருக்கேயுரியது (வச. 11) என்பதை தெரிந்து கொள்வோமாக.
நம் பரமத் தந்தையைப்போல நாம் முற்றிலும் மாற முடியாத இக்குறை நீண்ட நாட்கள் நிலைத்திருக்கப் போவதில்லை. தேவன் தம்முடைய அழகிய குணாதிசயங்களை நாம் பகிர்ந்து கொள்ளவே நம்மை அழைத்துள்ளார். இந்த உலக வாழ்வில் நாம் அவரை மிகக் குறைவாகவே பிரதிபலிக்கின்றோம். ஆனால், பரலோக வாழ்வில் பாவமோ துக்கமோ இல்லை. அங்கு நாம் அவரை முற்றிலுமாகப் பிரதிபலிப்போம். இதுவே “தேவனுடைய மெய்யான கிருபை” (வச. 12).
தேவனுடைய பார்வையில் விசுவாசிகள் சிலுவையின் மூலம் பூரணமாக்கப்படுகிறார்கள்.