வாழ்க்கையின் பிரச்னைகள் நமக்கு எரிச்சலூட்டி, முறைகேடாய் நடக்கப் பண்ணும். இந்தமாதிரி மோசமாக நடப்பது சகஜம் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் அது நாம் நேசிப்பவர்களின் இருதயத்தை வாடிப்போகச் செய்து நம்மைச் சுற்றிலும் துக்கத்தைப் பரப்பும். நாம் மற்றவர்களுடன் இனிமையாகப் பழகுவதைக் கற்றுக்கொள்ளும்வரை, பிறருக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யத் தவறுகிறோம்.
நமது அன்பற்ற, விரும்பத்தகாத குணத்தை மாற்றும் நற்குணத்திற்குப் புதிய ஏற்பாட்டில் ஒரு வார்த்தையுண்டு அது தான் – சாந்தம். சாந்தம் என்னும் இந்த வார்த்தை அன்பும், கிருபையுமுள்ள ஆத்துமாவைச் சுட்டிக்காட்டுகிறது. மிகுந்த மனத்தாழ்மையும், சாந்தமுமாய் ஜீவிக்க எபேசியர் 4:2 நம்மை நினைவூட்டுகிறது.
சாந்தம் என்பது, மற்றவர்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் மிகைப்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதேயாகும். மற்றும் சாந்தம் என்பது நமக்கு உதவி செய்யாதவர்களையும் சகித்து, மற்றவர்கள் செய்யும் சிறு உதவிகளுக்கும் நன்றியோடிருப்பதாகும். தொந்தரவு கொடுப்பவர்களையும், விசேஷமாய் உரத்த சத்தம்மிட்டு, முரட்டுத்தனமாக செயல்படும் அற்பமான மனிதரைச் சகிப்பது, சாந்தம். சிறு பிள்ளைகளிடத்தில் அன்பும் பாசமும் காட்டுவது சாந்தமுள்ள நல்ல மனிதனுக்கு அடையாளமும்; கிரீடமுமாயிருக்கிறது. பிறர் எரிச்சலுட்டும்பொழுதும் சாந்தமுள்ளவர்களின் பிரதியுத்தரம் மிருதுவானதாகவேயிருக்கும். அது பேசாமலும் அமைதியாகவும் இருக்கும். அன்பற்ற வார்த்தைகளால் பிறர் நம்மை நிந்திக்கும்பொழுது, கோபப்படாமல் அமைதியாய் இருப்பதே வல்லமையான மாறுத்தரமாகும்.
இயேசு, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்” என்றார் (மத். 11:29). நாம் அவரிடம் வேண்டிக் கொண்டால் ஏற்ற வேளையில் நம்மையும் அவரைப் போல் மாற்றுவார். ஸ்காட்லாண்ட் தேசத்து ஆசிரியர் ஜார்ஜ் மக்டோனல்ட் “மற்றவர்கள் இருதயத்தை வேதனைப்படுத்தும் வார்த்தைகளை நாம் பேசும்போது தேவன் அதைக் கேட்க விரும்மாட்டார். இப்படிப்பட்டதும் மற்றவிதமான பாவங்களிலிருந்தும் நம்மை மீட்கவே இயேசு பிறந்தார்.”
தேவனுக் முன்பாகத் தாழ்மைப்படுதல், நம்மை மற்றவர்களிடத்தில் சாந்தமாயிருக்கச் செய்யும்.