Archives: மே 2017

பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியாது

நீதிமன்ற விசாரணைகளில் சாட்சியாளர்கள் சாதாரண பார்வையாளர்களை விட முக்கியமானவர்கள். அவர்கள் வழக்கின் முடிவையே தீர்மானிக்கக்கூடிய முக்கிய பங்கை வகிப்பவர்கள். கிறிஸ்துவின் சாட்சியாக வாழக்கூடிய நாமும் அப்படிப்பட்டவர்கள்தான். மிக முக்கியமான இயேசுவின் மரணத்தையும் உயிர்தெழுதலின் சத்தியத்தையும் குறித்து சாட்சி பகருவதில் நாம் அதிக ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். 

இயேசுவைப் பற்றி தான் என்ன அறிந்திருந்தானோ, அதையே யோவான் ஸ்நானகன் சாட்சியாய்க் கூறி, உலகின் மெய்யான ஒளியை அறிமுகப்படுத்தினார். இயேசுவின் சீஷராகிய யோவானும், “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்று சம்பவித்த காரியங்களையெல்லாம் பதிவு செய்து சாட்சியளித்தார் (யோவா. 1:14). இளைஞனான தீமோத்தேயுவிற்கு அறிவுரை கூறும்பொழுதும் இந்த கருத்தைத்தான் பவுல் விளக்கிக் கூறினார். “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி” (2 தீமோ. 2:2). 

உலக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அனைத்து கிறிஸ்தவர்களும் அழைக்கப்படிருக்கிறோம். இங்கு நாம் வெறும் பார்வையாளர்கள் அல்ல, பங்காளர்களும் கூட என்று வேதாகமம் கூறுகின்றது. வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்று சொன்ன யோவான் ஸ்நானகனைப் போல இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி சாட்சிகூறவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது வேலை ஸ்தலத்தில், சுற்றுப்புறத்தில், சபையில், நண்பர் மற்றும் உறவினர் மத்தியில் நம்முடைய சத்தம் கேட்க வேண்டும். அவர்கள் மத்தியில், இயேசுவைக் குறித்து ஜாக்கிரதையுடன் சாட்சி பகரலாமே!

காத்திருப்பதின் சுமை

கடந்த இரண்டு வருடங்களில், என் குடும்பத்திலிருந்த இரண்டு நபர்கள் உயிருக்கு ஆபத்தான நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வந்த போது அவர்களுக்குத் துணையாக நான் இருந்தபொழுது ஒரு நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதுதான் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எப்பொழுதும் மருத்துவரிடமிருந்து ஒரு தெளிவான பதிலையே நான் எதிர்பார்த்தேன். ஆனால், அது அரிதாகத்தான் கிடைத்தது. ஒரு தெளிவான பதிலைக் கூறுவதற்குப் பதில் அநேகந்தரம் நம்மை காத்திருக்கும்படி கூறிவிடுகிறார்கள். 

அடுத்த மருத்துவ சோதனையில் என்ன நிகழுமோ என்று எண்ணத்துடன் ஒரு நிச்சயமற்ற நிலையின் பாரத்தை சுமப்பது மிகக் கடினமானது. மரணம் நம்மை பிரிப்பதற்கு முன் நம்மிடம் இருப்பது சில வாரங்களா, மாதங்களா அல்லது வருடங்களா? வியாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். வியாதியின் அறிகுறி அதை வெறுமனே வெளிக்கொண்டு வருகிறது. மனதிற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மரணத்தைப் பற்றிய எண்ணங்களை புற்றுநோய் போன்ற வியாதிகள் முன்னே கொண்டுவந்து நிலையற்ற வாழ்வை பற்றி சிந்திக்க தூண்டுகிறது. 

நம்முடைய நிலையற்ற வாழ்வை எண்ணிப் பார்த்ததும், நான் மோசே ஜெபித்ததுபோல் ஜெபிக்கத் துவங்கினேன். நம் வாழ்க்கை காலையிலே முளைத்துப்பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்து போகும் புல்லுக்கு ஒப்பான போதிலும் (வச. 5-6), தேவனே நம் நித்திய அடைக்கலமாக இருக்கிறார் (வச. 1) என்று சங்கீதம் 90 சொல்கிறதை அறிந்து, நம்முடைய நாட்களை எண்ணும் அறிவில் வளரும்படியாகவும், ஞான இருதயமுள்ளவர்களாகும்படியும் மோசேயை போல் நாமும் ஜெபிக்கலாம். அப்படிச் செய்யும் பொழுது புல் போன்று குறுகியகால வாழ்க்கை இருந்தாலும், நம்முடைய கைகளின் கிரியைகளை அவரே உறுதிப்படுத்துவார் (வச. 17).  

கடைசியாக, நம்முடைய நம்பிக்கை மருத்துவரின் ஆய்வறிக்கையில் இல்லை, “தலைமுறை தலைமுறையாக” நமக்கு அடைக்கலமாக இருக்கின்ற தேவன் மீதே இருக்கின்றது.

இருளிலும் துதிப்போம்

என்னுடைய நண்பன் மிக்கி(Mickey) தனது கண் பார்வையை இழந்து கொண்டிருந்த நிலையிலும், “நான் தேவனை தினந்தோறும் போற்றித் துதிக்கப் போகிறேன். ஏனெனில் அவர் எனக்காக அநேக காரியங்களை செய்துள்ளார்” என்று சொன்னான். 

முடிவில்லா துதியை ஏறெடுப்பதற்கான அற்புதமான காரணத்தை இயேசு நமக்கும் மிக்கிக்கும் தந்துள்ளார். சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய நாள் இரவு, இயேசு தமது சீஷர்களோடு பஸ்கா உணவு உண்பதை மத்தேயு 28ஆம் அதிகாரத்தில் காணலாம். உணவருந்தி முடிந்ததும், “அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடி பின்பு ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்” என்று 30ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரவு அவர்கள் ஏதோ ஒரு பாடலைப் பாடவில்லை – அது ஒரு துதிப் பாடலாகும். பல நூற்றாண்டுகளாக, ‘ஹல்லேல்’(Hallel) என்று குறிப்பிடப்பட்ட சில சங்கீதங்களை பஸ்கா பண்டிகையின்போது எபிரேயர்கள் பாடி வந்தனர் (எபிரேய மொழியில் ஹல்லேல் என்றால் “துதி” என்று அர்த்தம்). சங்கீதம் 113-118ல் இடம்பெற்றுள்ள ஹல்லேல் பாடல்கள், நமது இரட்சிப்பாகிய தேவனை கனம்பண்ணுவதை காணலாம் (118:21). தள்ளப்பட்ட கல் மூலைக்கல் ஆனதையும் (வச. 22) தேவனுடைய நாமத்தில் வருபவரைப் பற்றியும் இந்தப் பாடல்கள் குறிப்பிடுகின்றன (வச. 26). அப்படியென்றால், “இது கர்த்தர்  உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” என்று அவர்கள் அந்த இரவிலே பாடியிருக்கவேண்டும் (வச. 24). 

இயேசுவும் அவரது சீஷர்களும் பஸ்கா இரவில் தேவனைப் பாடித் துதித்ததின் மூலம், நாம் நம்முடைய சூழ்நிலைகளை விட்டு நமது கண்களை திருப்பி தேவனையே நோக்கும்படி நம்மை அழைக்கிறார். தேவனுடைய முடிவில்லா அன்பையும் நம்பிக்கையையும் நாம் என்றென்றும் போற்றும்படியாக அவர் நமக்கு முன் சென்று அன்றிரவு பாடித் துதித்தார்.

நான் மன்னிக்க வேண்டுமா?

ஓர் நிகழ்ச்சிக்காக ஆயத்தம்செய்யும்படி ஆலயத்திற்கு நான் சீக்கிரமாக வந்திருந்தேன். அப்போது ஆலயத்தின் ஓர் ஓரத்திலே ஒரு பெண் நின்று அழுதுகொண்டிருந்தாள். கடந்த காலத்தில் அவள் என்னைப்பற்றி மிகமோசமாக புறங்கூறியதை நான் அறிந்ததினால், அவளைக் கண்டுகொள்ளாமல் ‘வாக்யூம் கிளீனரின்’(vacuum cleaner) சத்தத்தில் அவள் அழுகையின் சத்தத்தை மூழ்கடித்துவிட்டு இடத்தை சுத்தப்படுத்த தொடங்கினேன். என்னை விரும்பாத ஒருவரைப்பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும் என்று எண்ணினேன்.

ஆனால், தேவன் என்னை எவ்வளவாக மன்னித்திருக்கிறார் என்பதை ஆவியானவர் நினைவுபடுத்தியவுடன், நான் அவளருகே சென்றேன். தன்னுடைய குழந்தை மருத்துவ மனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாக அவள் கூறினாள். நாங்கள் அழுதோம், அரவனணத்துக் கொண்டோம், பின்பு அவளது குழந்தைக்காக ஜெபித்தோம். எங்களுக்கு இடையே இருந்த பிரச்சனைகளை நாங்கள் சரிசெய்து கொண்டபின், இப்பொழுது நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம். 

மத்:18ஆம் அதிகாரத்தில், கணக்குவழக்கை சரிபார்க்கத் தொடங்கும் ஒரு ராஜாவுடன் பரலோகராஜ்ஜியத்தை இயேசு ஒப்பிடுகிறார். தன்னிடம் ஒரு மிகப்பெரிய தொகையை கடனாகப் பெற்றிருந்த ஓர் வேலைக்காரன் இரக்கத்திற்காக மன்றாடினபொழுது. ராஜா அவனது கடனை ரத்து செய்தார். ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே சென்று, தன்னிடம் மிக சொற்ப தொகை கடன் வாங்கியிருந்த ஓர் நபரை கண்டுபிடித்து அவனிடம் இரக்கமின்றி மிகக் கடினமாக நடந்து கொண்டான். ராஜாவிடம் இவன் வாங்கியிருந்த கடனோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிகவும் சிறிய தொகையே. இதை அறிந்த ராஜா, மன்னிக்காத சுபாவத்தையுடைய அந்த கொடிய வேலைக்காரனை கைது செய்து சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டார் (வச. 23-24). 

மன்னிக்கும்படியான தீர்மானத்தை நாம் எடுப்பதினால், பாவத்தை ஆதரிக்கலாம் என்றோ, நமக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும் என்றோ, அல்லது நம்முடைய காயங்களின் வலி குறைந்து போகும் என்றோ நினைக்கக்கூடாது. மன்னிப்பதின் மூலம் நம் வாழ்விலும், நமது உறவுகளின் மத்தியிலும் சமாதனம் உண்டுபண்ணும் அழகிய கிரியைகளை செய்யும்படியாக தேவனை அழைக்கிறோம். மன்னிப்பை அளிப்பதினால் நாம் விடுதலையடைந்து கிருபையினால் தேவன் நமக்களித்த இரக்கத்தினை அனுபவிக்கத் தொடங்குகிறோம்.