கின்ட்சூகி (Kintsugi) என்பது உடைந்த மண்பாண்டங்களை சீரமைக்கும் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஒரு ஜப்பானிய கலை ஆகும். குங்கிலியம் (Resin) என்னும் ஒரு பிசின் வகையோடு பொன்துகள்களை கலந்து, உடைந்த துண்டுகளை அக்கலவையைக்கொண்டு ஒட்டிவிடுவார்கள். விரிசல்களிலும் இதை நிரப்பிடுவார்கள். விளைவு, மிக உறுதியான ஒரு இணைப்பு. உடைந்து போன மண்பாண்டத்தில் ஏற்பட்ட சேதத்தை வெறுமனே மறைப்பதற்கு பதில் ஒரு அற்புதமான கலையைக் கொண்டு அதை அழகான பாண்டமாக மாற்றிவிடுவார்கள்.
அதைப்போலவே, நாம் செய்த பாவத்திற்காக உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும் பொழுது, அந்நொறுங்குண்ட நிலையை தேவன் மிக உயர்வாகக் காண்கிறார் என்று வேதம் கூறுகிறது. தாவீது பத்ஷேபாளோடு விபசாரத்தில் ஈடுபட்டதுமன்றி அவளுடைய கணவனைத் திட்டமிட்டு கொலை செய்தான். இதைக்குறித்து தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதை எதிர்கொண்டு விசாரித்த பொழுது, தாவீது மனந்திரும்பினான். “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்,” என்று பின்பு தாவீது செய்த ஜெபத்தின் மூலம், நாம் பாவம் செய்வோமானால் தேவன் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம் (சங். 51:16-17).
பாவத்தினால் நம்முடைய இருதயம் உடைந்து போயிருக்கும்பொழுது, சிலுவையிலே நமது இரட்சகரால் நமக்கு மிக தாராளமாய் அளிக்கப்பட்ட விலையேறப்பெற்ற மன்னிப்பைக் கொண்டு தேவன் நம் இருதயத்தை சீர்ப்படுத்துவார். நாம் அவரிடம் நம்மை தாழ்த்தி அர்ப்பணிக்கும் பொழுது, அன்புடன் நம்மை வரவேற்று கிட்டிச் சேர்த்துக்கொள்வார்
தேவன் எவ்வளவாய் இரக்கமுள்ளவர்! தாழ்மையுள்ள இருதயத்தையே தேவன் விரும்புவதாலும், அவருடைய இரக்கங்கள் மகாசவுந்தர்யமுள்ளதாய் இருப்பதாலும், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்: என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்,” என்னும் இன்னொரு வேதாகம ஜெபம் இன்று நமதாகட்டும் (சங். 139:23-24).
தெய்வீக துக்கம் மகிழ்ச்சிக்கு நேராக நம்மை வழிநடத்துகிறது.