முதல் முறையாக காற்றடைக்கப்பட்ட படகில் சவாரி செய்தபோது, கொந்தளிக்கும் நீரோட்டத்தின் கர்ஜனையை கேட்கும்வரை சந்தோஷமாக அத்தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். உரத்த அச்சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் என்ன நடக்குமோ என்ற ஐயமும், பயமும், பாதுகாப்பின்மையையும் ஒரே சமயத்தில் உணர்ந்தேன். கொந்தளிக்கும் தண்ணிரீல் கடந்து வந்தது, இரத்தத்தை உறைய வைக்கும் ஓர் அனுபவமாகும். ஒரு வழியாக திடீரென அக்கொந்தளிப்பு நின்றது. படகிலிருந்த எங்கள் வழிகாட்டி படகை செவ்வையாய் செலுத்தி எங்களை வழிநடத்தி வந்தார். ஆகவே அடுத்த கொந்தளிப்பு ஏற்படும் வரையேனும் நான் பத்திரமாக உணர்ந்தேன்.
இப்படகு சவாரி போல நம்முடைய வாழ்வில் ஏற்படும் நிலைமாறுதல்களும் கொந்தளிப்பாக காணப்படலாம். கல்லூரியிலிருந்து வேலைக்கு, ஒரு வேலையிலிருந்து வேறொரு வேலை, பெற்றோரோடு வாழ்ந்த காலம் முடிந்து தனியாகவோ அல்லது நம்முடைய துணையோடு வாழ்தல், பணியிலிருந்து ஓய்வு, இளமை காலத்திலிருந்து வயது முதிர்ந்து போனது ஒரு காலக்கட்டத்திலிருந்து இன்னொரு காலக்கட்டத்திற்கு நாம் பாய்ந்து செல்வது தவிர்க்க முடியாத ஒன்று. இந்நிலை மாறுதல்கள் அனைத்திலும் நிச்சயமின்மையும் பாதுகாப்பின்மையும் காணப்படுகின்றன.
பழைய ஏற்பாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிலைமாற்றம், சாலொமோன் தாவீதின் ராஜ்ஜிய பாரத்தை ஏற்றுக்கொண்டதாகும். நிச்சயமாக சாலொமோன் தன் எதிர்காலத்தைக் குறித்து கலங்கியிருக்கக் கூடும் என்றே நான் நினைக்கிறேன். அப்போது தன் தந்தையிடமிருந்து அவன் பெற்ற ஆலோசனை என்ன? “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி… தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்”, என்று தாவீது கூறினான் (1 நாளா. 28:20).
நம்முடைய வாழ்விலும் அநேக கடினமான நிலைமாற்றங்கள் ஏற்படும். ஆனால் நம்முடைய படகில் தேவன் இருப்பதால் நாம் ஒருபோதும் தனிமையாக இல்லை. ஆகவே கொந்தளிக்கும் தண்ணீர்கள் ஊடாய் நம்மை நடத்திச்செல்லும் தேவன் மீது நமது கண்களை பதிய வைக்கும்பொழுது, நமக்கு பாதுகாப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஏனெனில் நமக்கு முன்பே அவர் அநேகரைப் பத்திரமாக வழிநடத்திச் சென்றுள்ளார்.
மாற்றங்கள் என்னும் கொந்தளிப்பான தண்ணீர்கள் ஊடாய் தேவனே நம்மை வழிநடத்திச் செல்கிறார்.