நான் என் பேரக்குழந்தைகளோடு சந்தோஷமாக ஒரு சாயங்கால வேளையைக் கழிக்க நேர்ந்தது. அவர்களுடைய பெற்றோர் அன்று வெளியே சென்றதால், அவர்களை என்னுடைய பொறுப்பில் விட்டுச் சென்றார்கள். சந்தோஷத்தோடு அவர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த பிறகு, கடந்த வார விடுமுறை நாளை எப்படிக் கழித்தார்கள் எனக் கேட்டேன். உடனே மூன்று வயதாகிய பிரிட்ஜர் (Bridger) தன் அத்தை, மாமாவுடன் இருந்ததைக் குறித்து விவரித்தான். அவன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதையும் இராட்டினத்தில் சுற்றியதையும், சினிமா பார்த்ததைக் குறித்தும் மூச்சுவிடாமல் உற்சாகமாய் நினைவுகூர்ந்தான்! அடுத்து ஐந்து வயது நிரம்பிய சாமுவேலை பார்த்து நீ என்ன செய்தாய் எனக் கேட்ட பொழுது, “காம்பிங்” (Camping) என்று ஒற்றைச் சொல்லில் பதிலளித்தான். “குதுகலமாக இருந்ததா?” என்று நான் கேட்டதற்கு, “அவ்வளவாக இல்லை”, என சோகமாகக் கூறினான்.
தன்னுடைய தம்பி அவனுடைய அனுபவங்களை உற்சாகமாக கூறியதைக் கேட்ட சாமுவேல் தன் தந்தையோடு அவன் காம்பிங் சென்றபொழுது அனுபவித்த சந்தோஷத்தை மறந்து போனான். அப்பொழுது பொறாமை என்னும் பழமையான உணர்வு அவனை ஆட்கொண்டது.
நாம் அனைவருமே பொறாமைக்கு இரையாகக்கூடும். “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்”, என்று தன்னைக் காட்டிலும் தாவீதை அதிகமாய் போற்றிப் புகழ்ந்த பொழுது ராஜாவாகிய சவுல் பொறாமையினால் ஆட்கொள்ளப்பட்டான் (1 சாமூ. 18:7). ஆத்திரமடைந்த சவுல், “அந்நாள் முதற்கொண்டு தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்” (வச. 9). தாவீதை கொல்ல முயற்சிக்கும் அளவிற்கு சவுல் சீற்றமடைந்தான்!
பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது முட்டாள்தனமானது மட்டுமன்று, அது சுய அழிவிற்கும் வித்திடும். எப்பொழுதும் நம்மிடம் இல்லாத ஒன்றை வேறு யாராவது வைத்திருப்பார்கள் அல்லது நாம் அனுபவிக்காத நல்ல அனுபவங்களை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். ஆனால் தேவன் நமக்கு அநேக ஆசீர்வாதங்களை ஏற்கனவே அளித்துள்ளார். அதில் இம்மைக்குரிய வாழ்வு மாத்திரம் அன்றி, தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனுக்குரிய வாக்குத்தத்தத்தினால் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே, அவருடைய உதவியைப் பெற்று, எல்லாவற்றிலும் நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்கு நன்றி செலுத்துவோமானால் நாம் பொறாமையை மேற்கொள்ளலாம்.
தேவனுக்கு நன்றி செலுத்துவதே பொறாமைக்குரிய மருந்து.