என்னுடைய தோழி ரைலி (Ryley) “தேவன் கண் இமையைப் போன்றவர்” என்று கூறியதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் முழித்தேன். அவள் கூறியதின் பொருள் என்ன?
வேதாகமத்தில் தேவனைக் குறித்து சித்தரிக்கப்பட்டுள்ள படங்களைக் கடந்த சில நாட்களாக நாங்கள் இருவரும் சேர்ந்து ஆராய்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு வேதத்தில் தேவனை பிரசவிக்கும் தாயாகவும் (ஏசா. 42:14), தேனீ வளர்ப்பவராகவும் (7:18) காணலாம். ஆனால் என் தோழி கூறியது எனக்கு புதிதாக இருந்தது. ஆகவே அவளைப் பார்த்து, “அதைப்பற்றி மேலும் கூறு”, என்றேன். உடனே உபாகமம் 32ஆம் அதிகாரத்தை அவள் சுட்டிக்காட்டினாள். தன் ஜனத்தை தேவன் பராமரிக்கும் விதத்தை எண்ணி மோசே தேவனை போற்றி துதிப்பதை அவ்வதிகாரத்தில் காணலாம். அவர்களை “தமது கண்மணியைப்போல” தேவன் பாதுகாத்து காத்தருளினார் என்று 10ம் வசனம் விவரிக்கிறது.
கண்மணியைச் சூழ்ந்து பாதுகாப்பது எது? கண் இமை தானே! ஆம், தேவன் கண் இமையை போன்றவர். மென்மையான கண்களை பாதுகாப்பதையே தன் இயற்கையான பண்பாக கொண்ட கண்ணிமையை போன்றவர் நம் தேவன். கண்ணிமைகள் அபாயத்திலிருந்து கண்களை பாதுகாப்பது மட்டுமன்றி நாம் கண் சிமிட்டும்பொழுது, அழுக்கையும் தூசியையும் வெளியேற்றுகிறது. மேலும் வியர்வை உட்புகாமல் பாதுகாக்கிறது, கண்கள் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இறுதியாக கண்களை மூடி இளைப்பாற உதவி செய்கிறது.
தேவனை கண்ணிமையாக சித்தரித்துப் பார்த்தபொழுது, அவர் நம்மீது வைத்துள்ள அன்பை நாம் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர் நமக்களித்த அநேக உருவகங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்தினேன். இரவிலே கண்களை மூடி காலையில் விழிக்கும்பொழுது, தேவனுடைய மென்மையான பாதுகாப்பையும் பராமரிப்பையும் எண்ணி அவரை போற்றித் துதிப்போமாக.
நீங்கள் கண்சிமிட்டும் பொழுது, தேவனுடைய பாதுகாப்பை எண்ணி அவருக்கு நன்றி செலுத்துங்கள்.