“சாலையோரத்திலே உள்ள வீடு” என்னும் கவிதைத் தொகுப்பில், “சாலையோரத்திலே நான் வாழ்ந்து மனுஷருக்கு நண்பனாய் இருக்கவேண்டும்”, என கவிஞர் சாமுவேல் ஃபாஸ் (Samuel Foss) எழுதியுள்ளார். நானும் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். அதாவது மக்களின் நண்பனாக. சோர்ந்துபோன பயணிகளுக்காக சாலையோரத்திலே நான் காத்திருக்க விரும்புகிறேன். மற்றவர்களால் தீங்கு இழைக்கப்பட்டு, அடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருதயத்தில் நொறுங்குண்டு, காயப்பட்டு, பாரத்தோடு கடந்து வருபவர்களை வார்த்தையினால் உற்சாகமூட்டி பெலப்படுத்தி அனுப்ப விரும்புகிறேன். அவர்களையோ அல்லது அவர்களுடைய பிரச்சினைகளையோ முழுமையாக என்னால் சரிசெய்ய இயலாதிருப்பினும் ஆசீர்வதித்து அவர்களை வழியனுப்பலாம்.
யுத்தம் முடிந்து களைப்போடு திரும்பிக்கொண்டிருந்த ஆபிரகாமை, சாலேமின் ராஜாவும் ஆசாரியனுமாகிய மெல்கிசேதேக்கு ஆசீர்வதித்தான் (ஆதி. 14). தும்மலின் போது அனிச்சையாக கூறும் வாய்மொழியல்ல “ஆசீர்வாதம்”. ஆசீர்வாதத்தின் ஊற்றாகிய தேவனிடத்தில் பிறரை அழைத்து வருவதே உண்மையான ஆசீர்வாதம். “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக”, என்று மெல்கிசேதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதித்தான் (வச. 9).
நாம் பிறரோடு சேர்ந்து ஜெபிக்கும்பொழுது அவர்களை ஆசீர்வதிக்கிறோம். ஏனெனில் அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்படுவதற்கான ஒத்தாசையை பெற்றுக்கொள்ள கிருபையின் சிங்காசனத்தண்டை அவர்களை நாம் அழைத்துச்செல்லலாம் (எபி. 4:16) நம்மால் அவர்களுடைய சூழ்நிலைகளை மாற்றமுடியாமல் போகலாம், ஆனால் சூழ்நிலைகளை மாற்றவல்ல தேவனை அவர்களுக்கு காண்பிக்கலாம். ஒரு உண்மையான நண்பன் செய்யும் காரியம் அதுவே.
பிறருக்கு செவிசாய்ப்பதே அன்புகூருவதின் மிகப் பெரிதான காரியம்.