நீதிமன்ற விசாரணைகளில் சாட்சியாளர்கள் சாதாரண பார்வையாளர்களை விட முக்கியமானவர்கள். அவர்கள் வழக்கின் முடிவையே தீர்மானிக்கக்கூடிய முக்கிய பங்கை வகிப்பவர்கள். கிறிஸ்துவின் சாட்சியாக வாழக்கூடிய நாமும் அப்படிப்பட்டவர்கள்தான். மிக முக்கியமான இயேசுவின் மரணத்தையும் உயிர்தெழுதலின் சத்தியத்தையும் குறித்து சாட்சி பகருவதில் நாம் அதிக ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இயேசுவைப் பற்றி தான் என்ன அறிந்திருந்தானோ, அதையே யோவான் ஸ்நானகன் சாட்சியாய்க் கூறி, உலகின் மெய்யான ஒளியை அறிமுகப்படுத்தினார். இயேசுவின் சீஷராகிய யோவானும், “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்று சம்பவித்த காரியங்களையெல்லாம் பதிவு செய்து சாட்சியளித்தார் (யோவா. 1:14). இளைஞனான தீமோத்தேயுவிற்கு அறிவுரை கூறும்பொழுதும் இந்த கருத்தைத்தான் பவுல் விளக்கிக் கூறினார். “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி” (2 தீமோ. 2:2).
உலக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அனைத்து கிறிஸ்தவர்களும் அழைக்கப்படிருக்கிறோம். இங்கு நாம் வெறும் பார்வையாளர்கள் அல்ல, பங்காளர்களும் கூட என்று வேதாகமம் கூறுகின்றது. வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்று சொன்ன யோவான் ஸ்நானகனைப் போல இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி சாட்சிகூறவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது வேலை ஸ்தலத்தில், சுற்றுப்புறத்தில், சபையில், நண்பர் மற்றும் உறவினர் மத்தியில் நம்முடைய சத்தம் கேட்க வேண்டும். அவர்கள் மத்தியில், இயேசுவைக் குறித்து ஜாக்கிரதையுடன் சாட்சி பகரலாமே!
நாம் எண்ணுவதற்கும் மேலாக நன்மையாக இருப்பதால், நற்செய்தியை பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியாது.